அடுத்த 6 மாதத்துக்கு 3 சிலிண்டர் தான்: ஐ.ஓ.சி. அறிவிப்பு

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை.செப்.22 - சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாட்டினால் அடுத்த 6 மாதத்துக்கு 3 சிலிண்டர்கள் தான் வழங்கப்படும் என்று ஐ.ஓ.சி அறிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் நடந்த சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஐ.ஓ.சி. மேலாளர் எழிலரசன் பேசியதாவது:- ஒரு சமையல் எரிவாயு இணைப்புக்கு 6 சிலிண்டர்கள்தான் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 2012 செப்டம்பர் முதல் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரையிலான 6 மாத கால கட்டத்தில் 3 சிலிண்டர்தான் வழங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.

முன்பெல்லாம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இணைப்புக்கு 40 சிலிண்டர்கள் 70 சிலிண்டர்கள் என்று வழங்கப்பட்டன. மத்திய அரசின் புதிய உத்தரவை தொடர்ந்து யாராக இருந்தாலும் ஒரு இணைப்புக்கு அடுத்த மார்ச் மாதம் வரை 3 சிலிண்டர்கள் தான் மானிய விலையில் வழங்கப்படும். இது தமிழகம் முழுவதும் உடனடியாக அமுலுக்கு வருகிறது.

கூடுதல் சிலிண்டர் தேவைபடுவோருக்கு என்ன விலையில் சிலிண்டர் சப்ளை செய்வது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு வந்தவுடன் அது குறித்து தகவல் அனைத்து சமையல் எரிவாயு முகவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று எழிலரசன் தரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: