முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பிரச்சினை: வரும் 6-ம் தேதி கர்நாடகாவில் பந்த்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், செப். 23 - தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் அக்டோபர் 6 ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு மாநில பா.ஜ.க அரசின் ஆதரவும் மறைமுகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் கர்நாடகத்தில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்படவுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிரை காப்பாற்ற குறைந்தபட்சமாக கர்நாடகத்திலிருந்து 24 நாட்களுக்கு தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று (மொத்தம் 48 டி.எம்.சி.) முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இதை கர்நாடகம் ஏற்கவில்லை. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை என்றும், மாநிலத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே காவிரி நீரை வினியோகிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து எந்தவித உடன்பாடும் ஏற்படாமல், கூட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது.

ஆணையத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முடிவு ஏற்படாவிட்டால், ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் சொல்லும் தீர்ப்பை எந்த மாநிலமாக இருந்தாலும் ஏற்க வேண்டும் என்பது விதியாகும்.

இந் நிலையில் வரும் அக்டோபர் 6ம் தேதி, சனிக்கிழமை கர்நாடக மாநிலத்தில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால், அன்றைய தினம் பெரும் பதட்டம் நிலவலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த நிலையில், காவிரி பிரச்சனை தொடர்பான பிரதமரின் உத்தரவு, அடுத்த கட்டமாக சட்டரீதியாக எப்படி போராடுவது என்பது குறித்து விவாதிப்பதற்காக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூரில் நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

கர்நாடகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் 49 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வளர்ந்து நிற்கும் பயிர்களை பாதுகாப்பது, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களின் குடிநீர் தேவைகளை சமாளிப்பது ஆகியவற்றுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவு சரியல்ல. எனவே அந்த உத்தரவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்