முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் உரைக்கு எதிர்ப்பு: கோஷம் போட்டவர் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 23 - டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சட்டையைக் கழற்றியபடி முழக்கம் எழுப்பியவரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய சட்ட நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கம் நேற்று காலை டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் மன்மோகன்சிங் பேசத் தொடங்கிய போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து நின்று தமது சட்டையைக் கழற்றி சுழற்றிய படியே பிரதமர் மன்மோகன் சிங்கே திரும்பிப் போ என்று உரத்த குரலில் முழக்கம் எழுப்பினார் .இதனால் அங்கு திடீரென பரபரப்பும் பதட்டமும் நிலவியது. பிரதமர் மன்மோகன்சிங்கும் தமது பேச்சை நிறுத்திவிட்டார். 

பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து சென்று முழக்கம் எழுப்பியவரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அதன் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் தமது பேச்சை தொடர்ந்தார்.

மத்திய அரசின் அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமது அரசின் நடவடிக்கை நியாயமானதே என்று தொலைக்காட்சி மூலம் மன்மோகன்சிங் உரையாற்றியிருந்த நிலையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்