முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை - சோனியா

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 26 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஸ்திரமாக உள்ளது என்றார். மேலும் மத்திய அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் மறுத்தார்.
மத்திய அரசு எடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சிறப்பானவை என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் சற்று அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காரிய கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் நலிவடைத மற்றும் ஏழை மக்களுக்காக அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் ஏழை எளிய மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் முன்னோடி திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று சோனியா காந்தி கூறினார். பொருளாதாரம் பலமாக இல்லாவிட்டால் ஏழை எளிய மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் சிரமம் என்று சோனியா காந்தி தனது உரையில் குறிப்பிட்டார். பொருளாதார சீர்திருத்தங்கள் மிக மிக அவசியம் என்றும் அந்த திசையை நோக்கித்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். பா.ஜ.க. எதிர்மறை அரசியலை நடத்தி வருகிறது என்று குற்றம்சாட்டிய சோனியா காந்தி பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் கட்சி எப்படி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ அப்படி இப்போது நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். டீசல் விலை உயர்வு சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதி ஆகிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாவட்டம் தோறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று காரிய கமிட்டி கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சுருக்கமாக விளக்கி பேசினார். டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிரித்து நாடு தழுவிய பந்த் போராட்டத்தை கடந்த 20 ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தியதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்