முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.1-ம் தேதி முதல் ரயிலில் கட்டணங்கள் உயருகிறது..!

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.28 - வருகின்ற அக்டோபர் 1-ம் தேதி முதல் சரக்கு ரயில் கட்டணம் மற்றும் பயணிகளின் ஏ.சி.வகுப்பு கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 2012-13-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இவர் இந்த ரயில் கட்டண உயர்வு குறித்து தனது கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரயில்வேதுறை அமைச்சர் பதவியை தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்தார். இவருக்கு பதிலாக அதே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகல்ராய் ரயில்வே துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் டீசல் விலை உயர்வு,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு  அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விலகியது. இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த முகல்ராய் உள்பட6 அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். முகல்ராய் வகித்து வந்த ரயில்வேதுறையை மத்திய சாலைபோக்குவவத்து துறை அமைச்சர் சி.பி.ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ரயில்வே துறையில் சில பிரிவுகளுக்கு சேவை வரியை அமுல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனையொட்டி பயணிகள் ரயிலில் குளிர்சாதன வசதியுள்ள முதல், இரண்டாம்,மூன்றாம் வகுப்புக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று வகுப்புகளின் கட்டணம் வருகின்ற அக்டபோர் மாதம் 1-ம் தேதியில் இருந்து 3.7 சதவீதம் அதிகரிக்கும். அதேமாதிரி சரக்கு ரயிலுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதால் சரக்கு ரயில் கட்டணமும் வருகின்ற 1-ம் தேதி முதல் அதிகரிக்கும். சரக்கு கட்டணம் அதிகரிப்பதால் பொருள்களின் விலையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ரயில்வே இடங்களில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் சேவை வரி விதிக்கப்படுவதால் வாகன நிறுத்தம் கட்டணமும் அதிகரிக்கும். இதைத்தவிர ரயில் நிலையங்களில் அளிக்கப்படும் துணை சேவைகள் மீதான கட்டணம் 13.36 சதவீதம் உயருகிறது. இதன் மூலம் ரயிவேக்கு ஆண்டுதோறும் ரூ 3 ஆயிரத்து 100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர ரயில்வே பணிகள் அதிகம் உள்ள காலங்களில் அதிக போக்குவரத்து மிக்க வழித்தடங்கள் வழியாக சரக்குகள் அனுப்புவதற்கான கட்டணம் சரக்குகளின் தன்மைக்கேற்ப அதிகப்பட்சம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் ரயில்வேக்கு அடுத்து 6 மாதங்களில் ரூ. 826 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டணம் உயர்வு அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் தேதியிலிருந்து அமுல்படுத்தப்படும். ரயில்வேயில் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணங்களை ஒருங்கிணைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்