முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.அழகிரி மருமகளிடம் போலீஸ் விசாரணை

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை,அக்.8 - கிரானைட் முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் தயாநிதி அழகிரி தலைமறைவானதை தொடர்ந்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகளும், தயாநிதி அழகிரியின் மனைவியுமான அனுஷாவிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.    கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வந்த புகாரை தொடர்ந்து அரசு உத்தரவின்படி 18 குழுக்கள் அமைக்கப்பட்டு  ஆய்வு செய்யப்பட்டது. இதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த மோசடிகளுக்கு காரணமான பி.ஆர்.பி., மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உள்பட கிரானைட் அதிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பி.ஆர்.பி. கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள“ர். இந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதிஅழகிரி மற்றும் சிலர் கைதாகாமல் தலைமறைவானார்கள். இவர்களை பிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தனிப்படை அமைத்து தேடி வருகிறார். தயாநிதி அழகிரி இருப்பிடம் குறித்து அவரது உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கேடசன், தயாநிதியின் மாமனார் சீத்தாராமன் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

   இந்த நிலையில் தயாநிதி அழகிரிக்கு நெருக்கமாக இருந்து வந்த மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனுக்கு போலீசார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து மன்னன் நேற்று முன்தினம் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் தலைமையில் தனிப்படை போலீசார் தயாநிதி அழகிரி குறித்து விசாரணை நடத்தினர். 

    இதை தொடர்ந்து மு.க.அழகிரியின் மருமகளும், தயாநிதி அழகிரியின் மனைவியுமான அனுஷாவிற்கு நேரில் ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனை தொடர்ந்து அனுஷா அவரது தந்தை சீத்தாராமன் ஆகியோர் நேற்று காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களுடன் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மற்றும் வக்கீல்கள் வந்திருந்தனர். அனுஷா மற்றும் சீத்தாராமனிடம் தனி அறையில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அனுஷாவிடம் பெண் போலீசார் சில கேள்விகளை கேட்டனர். அவரது செல்போனுக்கு தயாநிதி அழகிரி தொடர்பு கொண்டாரா? அவர் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். மதியம் 1.00 மணி வரை இந்த விசாரணை நீடித்தது.

   இதன் பிறகு தி.மு.க. எம்.பி.யும் நடிகருமான ரித்தீஷ் நேற்று காலை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடமும்  ஒரு போலீஸ் குழு விசாரணை நடத்தியது. இவரிடம் இருந்தும் பல கேள்விகளுக்கு பதில் வாங்கினர். தயாநிதி அழகிரி எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்