முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையின மாணவர்களுக்கு பரிசுத் தொகை உயர்வு

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.8 - மாவட்ட அளவில் 10- 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கல்லாதவர்களே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதையே கோட்பாடாகவும், குறிக்கோளாகவும் கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, எளிதில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்த வகையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒருவருக்கு 2,800 ரூபாய் வீதம் 160 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி/தொழில் நுட்ப/தொழிற் பயிற்சி விடுதிகளில் தங்கி பயிலும் 6,550 மாணவ, மாணவியருக்கு  1 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது போல, சிறுபான்மையின மாணவ/மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் தற்பொழுது 10 ஆம் வகுப்பில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியருக்கு முறையே 1,500 ரூபாய், 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய், 1,000 ரூபாய் என உயர்த்தியும்,  12  ஆம் வகுப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 6,000 ரூபாய், 4,000 ரூபாய், 2,000 ரூபாய்  என உயர்த்தியும் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

மேலும்,  ஆதரவற்ற முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் சுயமாக சிறு தொழில்கள் செய்திட, இலவச தையல் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், மருத்துவ உதவித் தொகை, விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை  வழங்கிட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம்  திரட்டப்படும் நன்கொடைக்கு ஈடாக  அரசால் 1:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும் இணை மானியம்,  1:2 விகிதத்தில் இருமடங்காக உயர்த்தியும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையான  10 லட்சம் ரூபாயை  20 லட்சம் ரூபாய் என உயர்த்தியும் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு 1.4.2012 முதல் அமல்படுத்தப்படும்.  இதற்காக 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

மேலும்,  விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ,​மாணவியர் பயன் பெறும் வகையில் 2012-​13 ஆம் நிதியாண்டில் கட்டுமானப் பணி முடியும்  தருவாயில் உள்ள 5 விடுதிகளையும் சேர்த்து 103 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் 8,365 மாணவ, மாணவியர்களுக்கு 4,204 எண்ணிக்கையிலான இரும்பிலான இரண்டடுக்கு கட்டில்களையும், குளிர்பிரதேச பகுதிகளில் இயங்கும் 2 பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் 100 மாணவர்களுக்கு 50 எண்ணிக்கையில் மரத்திலான இரண்டடுக்கு கட்டில்களையும் வழங்கிடவும்,  அதற்காக 3 கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 620 ரூபாய் நிதியினை ஒதுக்கீடு  செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் அதிக ஊக்கத்துடன் கல்வி பயில வழிவகை செய்யும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்