முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,ஏப்.12 - தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அனல் பறக்கும் வகையில் நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஒலிபெருக்கி சத்தம் உள்பட அனைத்து சத்தங்களும் ஓய்ந்தன. நாளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிகிறது. 

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதேபோல் மேற்குவங்கம், அசாம், கேரளம், புதுவை மாநிலங்களிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டன. வழக்கமாக சுமூகமாக நடக்கும் இந்த பணி இந்த முறை எல்லா தரப்பிலுமே முதலில் சிக்கலில் தொடங்கி பின்னர் சுமூகமாக முடிந்தது.

அதன்பிறகு கடந்த 24-ம் தேதி அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கடந்த 24-ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல் அந்தந்த கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 30-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தேர்தல் பிரசாரம் தொடங்கியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் தொடங்கி பிறகு கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் போன்ற இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். நேற்றுமாலையுடன் அவர் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார். இதேபோல் திருவாரூரில் பிரசாரம் தொடங்கிய கருணாநிதி அதே ஊரில் நேற்று பிரசாரத்தை முடித்துக்கொண்டார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். இரு தரப்பிலுமே பல்வேறு நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்தனர். இதனால் பிரசாரத்தில் சூடு பிடித்தது. கனல் தெறிக்கும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டனர். இப்படி கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஒருபக்கம் கோடை வெய்யிலின் வெப்பம். இன்னொரு பக்கம் பிரசாரத்தால் ஏற்பட்ட வெப்பம். இப்படி அனல் பறக்கும் வகையில் நடந்த பிரசாரம் நேற்றுமாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த பல நாட்களாக நடந்த வாகன சோதனையில் ரூ. 40 கோடி வரை சிக்கியுள்ளது.ஓட்டுப்போட பணம் கொடுத்தாலும் அதை பெற்றாலும் ஓராண்டு சிறை என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. மேலும் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை இன்று மாலைக்குள் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் இன்று மாலையே பூத்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதட்டமான இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக துணைராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் உள்பட 2773 பேர் களத்தில் உள்ளனர். நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வழக்கமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கும். ஆனால் இம்முறை வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. தேர்தல் முடிவை தெரிந்துகொள்ள ஒரு மாதம் காத்திருக்க  வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்