முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப்பட்டுவாடா - மதுரையில் 87 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.12 - மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக நேற்று முன்தினம் மட்டும் 87 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சிம்மக்கல் பகுதியில் தி.மு.கவினர் முன்னாள் கவுன்சிலர் தலைமையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதி அ.தி.மு.க. நிர்வாகி சரவணகுமார் சம்பவ இடத்திற்கு சென்றார். இதையடுத்து அ.தி.மு.க., தி.மு.கவினர் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தி.மு.க.வை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ 3 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன், பழனி, மகேந்திரன், வெள்ளைத்துரை மற்றும் தனுஷ், ராஜா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மதிச்சியத்தில் வாக்காளர் பட்டியலுடன் பொதுமக்களிடம் பணம் விநியோகிகும் நோக்குடன் சென்றதாக தி.மு.க.வை சேர்ந்த வைகை மூர்த்தி கைது செய்யப்பட்டார். திருநகர் பாண்டியன் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த ரூ. 40 ஆயிரம் பறஇமுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் பகுதியில் இளங்கோவன் என்பவரிடம் இருந்து ரூ. 73 ஆயிரத்து 536 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிந்துபட்டி பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பால்பாண்டியிடம் ரூ 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளிக்குடி அலங்காபுரத்தில் அழகர்சாமி என்பவரிடம் இருந்து ரூ. 19 ஆயிரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். மதுரை புறநகர் பகுதியில் மட்டும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து வாகனம், லட்சக்கணக்கில் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony