ஜெகன் தங்கையின் பாதயாத்திரை சரித்திரம் படைக்கும்

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

ஹைதராபாத், அக்.21 - ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவின் பாதயாத்திரை ஆந்திராவில் சரித்திரம் படைக்கும் என்று கூறியுள்ளார் நடிகை ரோஜா. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்து ஜாமீனில் விடாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பதால் காங்கிரஸ், தெலுங்கு தேச கட்சியின் சூழ்ச்சிகளை மக்களுக்கு விளக்கும் வகையில் தனது பாதயாத்திரையை நேற்று முன்தினம் தொடங்கினார்.


3 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். முதல்நாள் பாதயாத்திரையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஜெகன் மோகன் ரெட்டி தாயாரும், எம்.எல்.ஏ.வுமான விஜய லட்சுமி, மனைவி பாரதி, நடிகை ரோஜா உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் பங்கேற்றனர்.

ஷர்மிளா பாதயாத்திரை பற்றி நடிகை ரோஜா கூறுகையில், ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் எதிர்த்து ஒரு பெண் பாதயாத்திரை மேற்கொள்வது இந்திய அரசியல் சரித்திரத்திலேயே இடம் பெறாத ஒன்று. மகாத்மா காந்தி யாத்திரை சென்றபோது அவருடன் பெண்கள் கலந்து கொண்டனர். அதற்கு பிறகு ஒரு பெண் யாத்திரை செல்வது இதுதான் முதல் சம்பவம் ஆகும்.

ஷர்மிளா பாதயாத்திரை சரித்திரம் படைக்கும். மக்களின் துயரை தீர்க்கும். மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டிய காங்கிரஸ் அரசு கையாலாகாத அரசாக உள்ளது. 9 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் சந்திரபாபு நாயுடு அப்போது மக்களுக்கு எதுவும் செய்யாமல் இப்போது மக்களை சந்திக்க வருகிறார்.

பதவி ஆசையில் அவர் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். ஆனால் ஷர்மிளா யாத்திரை மக்களுக்காக நடக்கிறது. ஜெகன் விடுதலையாகி வந்தால் யாத்திரையை அவர் தொடங்குவார், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: