முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறந்த சினிமா உதவி இயக்குநர் சாவில் மர்மம் - புகார்​

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

காஞ்சிபுரம், அக்.22 -​ ஒட்டன்சத்திரம் அருகே மூச்சுத்திணறலில் இறந்த சினிமா உதவி இயக்குநர் சாவில் மர்மம் உள்ளது எனக்கூறி காஞ்சிபுரம் போலீசில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பாரதி நகரில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மகன் வரதராஜன் (55). இவர் தமிழ் சினிமா திரைப்பட உதவி இயக்குநர் ஆவார். இதனிடையே இவர் சினிமா இயக்குநர் ஞானசேகரன், உதவி இயக்குநர்கள் சண்முகசுந்தரம், சுந்தரமூர்த்தி மற்றும் சிலருடன் சேர்ந்து புதிய சினிமா படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார். அதன்படி இவர்கள் `காதலை காதலிப்போம்' என்ற படத்தை இயக்கி வந்தனர். இப்படத்தின் கதை வசனம் எழுதுவதற்காக இயக்குநர் ஞானசேகரன், உதவி இயக்குநர் வரதராஜன் உள்ளிட்டோர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த பாச்சலூர் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கு சென்றனர். அங்கு அமைதியான இயற்கை சூழலில் அமர்ந்து கதை வசனம் குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த உதவி இயக்குநர் வரதராஜனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மலையிலிருந்து கீழே அழைத்து வந்தனர். அதற்குள் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் ஃப்ரீசர் பாக்ஸ் மூலம் காஞ்சிபுரத்திற்கு நேற்று காலை கொண்டு வந்தனர். 

இறந்த வரதராஜனின் மனைவி கலாவதி, இன்ஜினியரிங் மாணவனான மகன் வானரசன் ஆகியோர் வரதராஜனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது வரதராஜனின் தலை கை உள்ளிட்ட சில இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து வரதராஜனின் அக்காள் மகன் பன்னீர்செல்வம் பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அவர் எனது மாமாவின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது சாவில் மர்மம் உள்ளதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவின்பேரில் நகர துணை சூப்பிரண்டு வி.சந்திரசேகரன் மேற்பார்வையில் பெரிய காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் துரை.பாண்டியன், சப்-​இன்ஸ்பெக்டர்கள் சுகவனம் பூம்பாவை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த உதவி இயக்குநர் வரதராஜின் பிணம் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் கூறுகையில், உதவி இயக்குநர் வரதராஜின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை விசாரணை அறிக்கை வந்தால்தான் இது இயற்கை மரணமா? கொலையா என்பது தெரியவரும். யாரேனும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்