முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தாரம்மன் கோயிலில் தசரா விழாவில் சூரசம்ஹாரம்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், அக்.25 - குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. வேடம் அணிந்து ஆடிப்பாடி வந்த பக்தர்களால் கோலாகலமாக இருந்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா சிறப்பாக நடக்கிறது. ஞானமூர்த்தீசுவரர் சமேதராக அன்னை முத்தராம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலில் நடைபெறும் விழாக்களில் தசரா விழாவே முதன்மை வகிக்கிறது. இந்த தசரா விழா லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் விழாவாகும்.

இந்த ஆண்டு தசராவிழா கடந்த 15ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் அன்னை முத்தாரம்மன் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விசுவகர்மேசுவரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிசாசூரமர்த்தினி, ஆனந்த நடராஜர், கஜலட்சுமி, கலைமகள் திருக்கோலங்களில் பவனி வந்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹரம் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், மகா அபிஷே-கம் நடத்தப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு சூலாயுதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீயசக்திகளை அழிப்பதற்காக அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளினார்.

கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் வீற்றிருக்க மகிஷாசுர சூரன் சற்று நேரத்தில், சம்ஹாரம் செய்யப்பட்டான். அங்கு கூடி இருந்த பக்தர்கள் ஓம் காளி ஜெய் காளி என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். பக்தர்கள் கோஷம் விண்ணை பிளந்தது.

வேடம் அணிந்த பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் நீராடி வேடத்தை கலைத்தனர். காணிக்கையாக வசூலித்த பணத்தை கோவிலில் செலுத்துகிறார்கள். தசரா குழுவினர் சார்பில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

தொடர்ந்து அம்மன் கடற்கரை மேடைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. சிதம்பரேசுவரர் கோவில் எழுந்தருளிய அம்மனுக்கு, அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இன்று (வியாழன்) பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. பகலில் அன்னதானம் நடைபெறும். மாலையில் அம்மன் கோவிலை வந்தடைந்ததும் கொடி இறக்கம் நடைபெறும். தொடர்ந்து காளி வேடம் அணிந்து இருக்கும் பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் காப்பு களைகிறார். நாளை (வெள்ளி) பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர். இன்று மாலை காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து உணவை சமைத்து சாப்பிட்டு தங்கி இருந்து காப்பு களைந்ததும் ஊர் திரும்புவார்கள்.

தசரா விழாவில் சிவன், விஷ்ணு,  காளி, கருங்காளி,  முத்தாரம்மன், முருகன், விநாயகர், ராமர், லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், கரடி, முனிவர், முனிவர், போலீஸ்காரர், பிச்சைக்காரன், குறவன்குறத்தி, மணப்பெண், மாப்பிள்ளை என பல்வேறு வேடம் அணிந்து வந்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி (பொறுப்பு) தலைமையில், 8 துணை சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் ஆயுதப் படை போலீசார், சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி உதவி ஆணையர் மற்றும் தக்கார் க.செல்லத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி தி.சங்கர் ஆகியோர் செய்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்