முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ்கொலை வழக்கில் வீடியோ கேசட் பதுக்கப்பட்டுள்ளது

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, அக். - 31 - ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று பதுக்கப்பட்டதாகவும், இதைச் செய்தவர் அப்போது ஐ.பி தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் என்றும், அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் சி.பி.ஐ யின் தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே ராஜீவ் கொலை வழக்கு, மர்மம் விலகும் நேரம் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது மற்றொரு புதிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களிலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டு விட்டது என்பதுதான்! ராஜீவ் கொல்லப்பட்ட மறுநாள் அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு ஐ.பி அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய மேற்கு வங்க கவர்னர் எம்.கே. நாராயணன் ஒரு கடிதம் எழுதினார். அதில் எங்களிடம் ஒரு முக்கிய கேசட் உள்ளது. அதில் அந்த பெண்மணியை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் கடைசிவரை ஐ.பி வசம் இருந்த அந்த கேசட் சி.பி.ஐ யிடமும் சரி. வேறு எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் ஒப்படைக்கப்படவே இல்லை என்பதுதான் ரகோத்தமனின் குற்றச்சாட்டு. ராஜிவ் கொலை வழக்கில் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் தான் பிரதான ஆதாரமாக இருந்தது. இந்த நிலையில் சிவராசன், தணு உள்ளிட்டோர் சில மணி நேரம் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்தில் காத்திருந்து ராஜீவை கொலை செய்திருக்கின்றனர். அந்த சில மணி நேரங்களில் அவர்கள் யார், யாருடன் பேசினர்? எப்படி ராஜீவுக்கு மாலையிடும் இடத்துக்கு மெதுவாக நெருங்கினர் என்பது போன்ற விவரங்கள் ஐ.பி வசம் இருந்த கேசட்டில் பதிவாகி இருக்கலாம் என்பதுதான் ரகோத்தமனின் சந்தேகம். தமது முந்தைய புத்தகத்தில் இதுபற்றி எழுதியுள்ள ரகோத்தமன், அப்படி ஒரு கேசட் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சனை வரும் என்று கருதி முழுப்பூசணியை மறைத்து விட்டது ஐ.பி. என்று சாடியுள்ளார். அத்துடன் இறந்த தலைவரை விட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள் என்றும் ரகோத்தமன் வருத்தம் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர் மூலமே சிவராசன் குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்துக்குள் நுழைய முடிந்தது என்பது பலதரப்பிலும் வெளியான தகவல். ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் ரகோத்தமன் இத்தகைய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தற்போதைய புத்தகத்திலும் கேசட் பற்றிய எம்.கே. நாராயணின் 1991 ம் ஆண்டு மே மாதம் 22 ம் தேதிய கடிதம் பற்றியும் இந்த கேசட்டுக்கு என்னாச்சு என்றும் மீண்டும் ரகோத்தமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்