முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 4 - மானிய விலையில் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டிற்கு 6 லிருந்து 9 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில் கடும் நிதி சுமை காரணமாக வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்கள், ஆண்டிற்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படும் குடும்பங்கள், மானியம் இல்லாமல் முழு விலையும் கொடுத்து சிலிண்டர்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் கடும் அதிருப்தி அடைந்தது. மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 890 முதல் ரூ. 910 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று மாநில முதல்வர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களில் மட்டும் மானிய விலையில் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எதிர்கட்சியினரின் அதிருப்தி தெரிவித்தனர். 

இந்த நிலையில் தற்போது பெட்ரோலிய துறைக்கு புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வீரப்ப மொய்லி, இது தொடர்பாக மத்திய எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநில அரசுகள் மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 6ல் இருந்து 12 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு வைத்துள்ள ஆய்வு புள்ளி விவரப்படி ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 9 சிலிண்டர்கள் அவசியம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சிலிண்டர் தேவை மற்றும் வினியோகம் தொடர்பான முழு விவரங்களை ஆய்வு செய்யும்படி எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு எண்ணை நிறுவனங்களுடன், அமைச்சர் வீரப்ப மொய்லி விரிவான ஆலோசனை நடத்தி, அதன் கருத்துகளை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதன்பிறகு மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்.

ஏனெனில் இந்த பிரச்சனையில் பெட்ரோலிய துறை தனித்து செயல்பட்டால், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரிகளின் மானியத்தை அந்த துறை வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.  எனவே இந்த பிரச்சனையில் இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும். ஆனால் இது குறித்து இறுதி முடிவை உடனடியாக அறிவிக்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. ஏனெனில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போது சிலிண்டர் சலுகையை மத்திய அரசு அறிவித்தால் அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரான அமைந்துவிடும். எனவே அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு, இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்