முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுப்பதிவின் போது வன்முறையை கட்டவிழ்த்து விட கருணாநிதி திட்டம்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - அ.தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் மத்திய மந்திரி துணையுடன் வன்முறையை கட்டவிழ்த்து விட கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளதுடன், இதை உடனடியாக தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தோல்வி பயத்தில் தவித்த மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி,  கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையத்தை மிரட்டிக் கொண்டு வந்ததுடன், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரின் துணையோடு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் தன்னுடைய வழக்கமான வன்முறைக் கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விடும் முயற்சியில் இறங்கியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து, அங்கெல்லாம் தேர்தல் நாளன்று வன்முறையை கட்டவிழ்த்துவிடும் பொறுப்பு, மத்திய அரசின் உளவுத் துறை அதிகாரி சங்கரநாராயணன் தலைமையில், காவல் துறை அதிகாரி ஜாபர் சேட், காவல் துறை தலைமை இயக்குநர் லத்திகா சரண், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும்; இதன்படி வாக்காளர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த ரவுடிகள் வன்முறையை தூண்டிவிட தயாராக உள்ளதாகவும்; வன்முறை காரணமாக வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வராததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அனைத்து வாக்குகளையும் தி.மு.க.விற்கு சாதகமாக போட தி.மு.க. ரவுடிகள் தயாராக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. வேலியே பயிரை மேய்வது போல் சட்டம்​ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே இது போன்ற வன்முறைச் செயலுக்கு துணை போவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.       தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டியது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை.  எனவே, தி.மு.க.வினரின் வன்முறைச் செயல்களுக்கு துளியும் இடம் அளிக்காமல், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும்,  தி.மு.க.வினரின் இது போன்ற சதிகளையும், சூழ்ச்சிகளையும், வன்முறைத் திட்டங்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், இது போன்ற வன்முறைச் செயல்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நாளை நடைபெறுமேயானால், அதற்கு மத்திய உளவுத் துறை அதிகாரிகளும், மாநில உளவுத் துறை அதிகாரிகளுமே முழுப் பொறுப்பு என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony