முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல பிரதேசத்தில் அமைதியாக நடந்த சட்டசபைதேர்தல் மந்தமாகதுவங்கி விறுவிறுப்படைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

சிம்லா, நவ. - 5 - இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தது. துவக்கத்தில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு போகப் போக விறுவிறுப்பானது. இந்த தேர்தலில் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா, அல்லது காங்கிரசா என்பது டிசம்பர் 20 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் முடிந்து நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இம் மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன. இரண்டு கட்சிகளுமே மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. பகுஜன் சமாஜ் கட்சி இந்த தேர்தலில் 66 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து இமாச்சல் லோஹித் கட்சி 36 இடங்களிலும், டி.எம்.சி. கட்சி 25 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 16 இடங்களிலும், இ. கம்யூனிஸ்டு கட்சி 15 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் மற்றும் 105 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இமாச்சல் பிரதேச முதல்வராக தற்போது பிரேம்குமார் துமால் இருந்து வருகிறார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. எப்படி பஞ்சாபில் அகாலிதள பா.ஜ.க கூட்டணி மீண்டும் பதவிக்கு வந்து வரலாறு படைத்ததோ, அதே போல் இங்கும் வரலாறு படைப்போம் என்று பா.ஜ.க கூறுகிறது. ஆனால் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான அமிரீந்தர்சிங், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்று அடித்துக் கூறுகிறார். இம்மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் முதல்வர் பிரேம்குமார் துமாலும், காங்கிரஸ் சார்பில் வீரபத்ரசிங்கும் போட்டியிடும் முக்கிய புள்ளிகளாவர். இரு தரப்பினருமே ஊழலை பற்றி பேசியே ஓட்டுக் கேட்டனர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 459 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 27 பேர் பெண்களாவர். இந்த தேர்தலுக்காக மொத்தம் 7,253 வாக்குச் சாவடிகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 20 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ல் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. அப்போது இந்த கட்சிக்கு 41 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 23 இடங்கள் கிடைத்தன. சுயேட்சைகள் 3 இடத்தில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2007 ல் நடந்த தேர்தலின் போது இம்மாநிலத்தில் 71.61 சதவீத வாக்குகள் பதிவாயின. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 68.36 சதவீதம் ஆகும். பெண் வாக்காளர்கள் 74.01 சதவீதமாகும். நேற்றைய தேர்தல் துவங்கிய போது வாக்குப் பதிவு ஆரம்பத்தில் மிக மிக மந்தமாக இருந்தது. பிறகு போகப் போக சூடு பிடித்தது. நண்பகல் 12 மணிக்குள் 30 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆனால் ஆரம்பத்தில் அதாவது முதல் இரண்டு மணி நேரத்தில் வெறும் 10 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது. பிறகு வாக்குப் பதிவு விறுவிறுப்பு அடைந்ததாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரீந்தர் சவுகான் தெரிவித்தார். ஹமீர்பூர், மாண்டி, சிம்லா, சோலன், காங்ரா ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு அதிகபட்சமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் துவங்குவதில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். வாக்குப் பதிவு நேற்று மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவரும், 5 முறை முதலமைச்சராக இருந்தவருமான வீரபத்ரசிங், ராம்பூர் டவுனில் தனது சொந்த ஊரில் வாக்களித்தார். தற்போதைய முதல்வர் பிரேம்குமார் துமால் சமீர்பூர் என்ற இடத்தில் தனது வாக்கை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் வீரபத்ரசிங் சிம்லா ரூரல் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பிரேம்குமார் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மாவும் தலைநகர் சிம்லாவில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷர்மா, நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். இது எங்களது நம்பிக்கை என்று தெரிவித்தார்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் இன்டக்சன் ஸ்டவ் கொடுப்போம் என்று பா.ஜ.க உறுதியளித்துள்ளது. இவற்றை வாங்க யார் பணம் கொடுப்பார்கள்? பாரதீய ஜனதா கொடுக்குமா? வாக்காளர்களை திசை திருப்புகிறது பா.ஜ.க என்றும் ஆனந்த் ஷர்மா நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த தேர்தலில் 95 வயதான முதியவர்களும் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 20 ம் தேதி எண்ணப்படுகிறது. அப்போது வெற்றிப் பெறப் போவது பா.ஜ.கவா, காங்கிரசா என்பது தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்