முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதிக்கு எதிரான மனுக்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

அலகாபாத், நவ. - 6 - தாஜ் வணிக வளாக ஊழல் விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் அலகாபாத் ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் மாயாவதிக்கு மிகப் பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது என்று சொல்லலாம். உத்தர பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதல்வராக இருந்த போது தாஜ்மகாலை சுற்றி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பின்னர் மாயாவதிக்கு எதிராகவும், அவரது அமைச்சரவை சகாவான நஸீமுதீன் சித்திக்கிற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. ஆனால் கடந்த 2007 ம் ஆண்டு ஜூன் மாதம் மாயாவதி மற்றும் சித்திக்கிற்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கைவிட்டது. அப்போதைய உ.பி. கவர்னர் இந்த வழக்கிற்கு அனுமதி அளிக்காததால் வழக்குகளை கைவிட்டது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். அதற்கு பிறகு 2009 ம் ஆண்டில் சி.பி.ஐ. கோர்ட்டின் முடிவை எதிர்த்து 3 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பிறகு மேலும் சில வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறாக மாயாவதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் அலகாபாத் ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. மாயாவதியின் அமைச்சரவை சகாவான நஸீமுதீன் சித்திக்கிற்கு எதிரான மனுக்களையும் லக்னோ பெஞ்ச் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை நீதிபதிகள் முர்தாஸா, அஸ்வினி குமார்சிங் ஆகியோரடங்கிய பெஞ்ச் பிறப்பித்தது. இந்த மனுக்கள் அனைத்துமே தகுதியற்றவை என்று கூறி அவற்றை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். முன்னதாக, இந்த வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதியின் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் சந்திரா மிஸ்ரா ஆஜராகி வாதாடினார். அப்போது கூறிய அவர், மாயாவதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. போலியான எண்ணம் கொண்டவை என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தனர். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் சதீஷ் சந்திரா, தாஜ் வணிக வளாக வழக்கில் மாயாவதிக்கு எதிராக எந்த குற்றமும் இல்லை. அது நிரூபிக்கப்படவும் இல்லை என்று தெரிவித்தார். 74 பக்க தீர்ப்பையும் அவர் வெளியிட்டார். கடந்த செப்டம்பர் 12 ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர். அந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு மூலம் மாயாவதிக்கு மிகப் பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்