முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க ரூ.30.36 கோடி செலவில் 20சேமிப்பு கிடங்குகள்

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 7 - விவசாயிகளின் விளைபொருளை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கவும் ஏதுவாக 30.36 கோடி ரூபாய் செலவில் 20 கிடங்களில் ஊரக சேமிப்பு இடங்குகளைக் கட்டவும், 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் 20 குளிர்பதன கிடங்குகளை அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழவுத்தொழிலை மேற்கொண்டுள்ளவர்கள் உலகத்தில் வாழும் அனைவருக்கும் உணவு அளித்து காப்  பதால், உழுபவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் வள்ளுவர் பெருந்தகை.  அத்தகைய உழவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வழி செய்யும் வகையிலும்,  பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. வேளாண் துறையில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்குதல், நுண்ணீர் பாசனத்திற்காக  விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், விவசாய விளை பொருட்களை சேமிக்க, கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைத்தல், அதிக அளவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்குதல், உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை விவசாயிகளின் நலனுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில்  உள்ள பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர்க் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பயிர்களை நீnullண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும், அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு தங்கள் விளை பொருட்களை விற்று விடுகின்றனர்.  இதன் காரணமாக, தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.  விலை வீழ்ச்சியின் போது பொருட்களை பாதுகாத்து, பின்னர் விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்வது விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் என்பதையும், அறுவடைக் காலங்களில் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சியும், தேவை அதிகரிக்கும்போது,  உற்பத்தி இல்லாததால் விலை ஏற்றமும் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதையும், கருத்தில் கொண்டு, எடைபோடும் இயந்திரங்கள், எடைமேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய நவீன முறையிலான சேமிப்புக் கிடங்குகளை கூடுதலாக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.   அந்த வகையில், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை பாதுகாப்பாக இருப்பில் வைத்து, அவற்றிற்கு நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வகையிலும், உழைப்பின் பலன் உழவர்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், எடைபோடும் இயந்திரங்கள், எடைமேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய  50 கிடங்குகளை 82 கோடி ரூபாய் செலவில் அமைக்க சென்ற ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.  அதே போன்று, இந்த ஆண்டு  18 நவீன சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 50 குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை  37 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு மேலும்,  20 நவீன சேமிப்புக் கிடங்குகள் மற்றும்  20 குளிர்ப்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை 30 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

அந்தவகையில்,  2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 நவீன சேமிப்புக் கிடங்குகள், ஒவ்வொன்றும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை விற்பனைக் குழுவின் செங்கம்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கடலூர் விற்பனைக் குழுவின் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு விற்பனைக் குழுவின் கருமாண்டி செல்லிப்பாளையம் மற்றும் வேப்பிலி  ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேலூர் விற்பனைக் குழுவின் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருச்சி விற்பனைக் குழுவின் துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோயம்புத்தூர் விற்பனைக் குழுவின் பொங்கலூர், பல்லடம் மற்றும் தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விழுப்புரம் விற்பனைக் குழுவின் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நாகப்பட்டினம் விற்பனைக் குழுவின் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தர்மபுரி விற்பனைக் குழுவின் அரூர் மற்றும் பென்னாகரம்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ராமநாதபுரம் விற்பனைக் குழுவின் ஆர்.எஸ்.மங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருநெல்வேலி விற்பனைக் குழுவின் அம்பாசமுத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தேனி விற்பனைக் குழுவின் போடிநாயக்கனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தர்மபுரி விற்பனைக் குழுவின் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சேலம் விற்பனைக் குழுவின் ஆத்தூர்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்  ஆகிய 20 இடங்களில் ஊரக சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதே போன்று, 25  மெட்ரிக் டன் கொள்ளளவில்  20 குளிர்ப்பதன கிடங்குகள், கிடங்கு ஒன்றிற்கு 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதத்தில் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கோயம்புத்தூர் விற்பனைக் குழுவின் பல்லடம், பெள்ளாச்சி மற்றும் வடக்கிப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், சேலம் விற்பனைக் குழுவின் மேச்சேரி மற்றும் வாழப்பாடி  ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், தர்மபுரி விற்பனைக் குழுவின்  கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருவண்ணாமலை விற்பனைக் குழுவின் செய்யார், சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு விற்பனைக்  குழுவின் வெள்ளக்கோயில் மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருநெல்வேலி விற்பனைக் குழுவின் அம்பாசமுத்திரம், புத்தூர், சாத்தான்குளம் மற்றும் கழுகுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விழுப்புரம் விற்பனைக் குழுவின் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருச்சி விற்பனைக் குழுவின் அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடலூர் விற்பனைக் குழுவின் விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய  20 இடங்களில் குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், விவசாயத்தில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்கு  அதிக அளவில் தொழில் நுட்ப வல்லுநர்களை  உருவாக்க வேண்டியது அவசியம் என்பதைக்  கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள மாநில வேளாண்மை பயிற்சி நிலையத்தில் இரண்டாண்டு வேளாண்மை பட்டயப் படிப்பினை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் இந்த ஆண்டு முதல் தொடங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிச் சுமை, அதிகரிக்கும் போக்குவரத்து செலவினங்கள் போன்றவற்றால் ஏற்படும் நிதிச் சுமையின் காரணமாக சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.  இதனை அறிந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா வழிவகை முன்பணமாக என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை  ஆலைக்கு 17 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயும், திருத்தணி சர்க்கரை ஆலைக்கு 14 கோடியே 29 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும், மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 6 கோடியே 48 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 38 கோடியே 13 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்  வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்