முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா -கனடா வர்த்தக பரிவர்த்தனையை ரூ. 82,000 கோடியாக உயர்த்ததிட்டம்

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 7 - கனடா, இந்தியாவுக்கு இடையேயான வர்த்தகத்தை ரூ. 82 ஆயிரம் கோடியாக உயர்த்துவது குறித்து இரு நாட்டு அமைச்சர்களிடையே ஆலோசனை நடந்தது. இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் அந்நாட்டு ஜனநாயக மறுசீரமைப்பு துறை அமைச்சர் டிம் உப்பாலும் வந்திருந்தார். உப்பால் மற்றும் வெளிநாடுவாழ் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி இருவரும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் இது குறித்து வயலார் ரவி கூறியதாவது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை அதிகரிக்க பெரும் வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறோம். கனடா வாழ் இந்தியர்கள் இந்திய வம்சாவளி நபர்கள் என்பதற்கான அடையாள அட்டை பெறுவது உட்பட அனைத்து விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டன. கனடாவில் அடையாள அட்டையை 8 லட்சம் இந்தியர்கள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனையை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ரூ. 82.13 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு காய்கறிகள், உரங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவற்றை கனடா ஏற்றுமதி செய்கிறது. அதே சமயம் இயற்கை ரசாயனங்கள், கம்பளி ஆடைகள், விலை மதிப்பற்ற ஆபரணங்கள் ஆகியவற்றை இந்தியாவிடம் இருந்து கனடா இறக்குமதி செய்கிறது. இது குறித்து டிம் உப்பால் கூறுகையில், பேச்சுவார்த்தை நீண்ட பலனை அளிக்கும் வகையில் இருந்தது. ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்