முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்காரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணமே இல்லை: பாஜக

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

டெல்லி, நவ.- 8 - பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் நிதின் கட்காரி தொடர்ந்து பாஜக தலைவராக இருப்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவால் தான் கட்காரி பதவி தப்பியுள்ளது. பாஜக தலைவர் நிதின் கட்காரி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறார். கட்காரியை எதிரி?த்து மூத்த பாஜக எம்பியும் வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானியின் மகன் மகேஷ் ஜேத்மலானி பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்காரி பதவி விலக வேண்டும் என்று ராம் ஜேத்மலானி வலியுறுத்தியுள்ளார். ஆனால் நிதின் கட்காரிக்கு எதிராக கட்சிக்குள் பலர் இருந்தாலும் ஆர்எஸ்எஸ் அவருக்கு பெரும் ஆதரவாக உள்ளது. முதலில் கட்காரியை எதிர்த்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திடீரென அவரை ஆதரிப்பதாக டுவிட்டரில் தெரிவித்துவிட்டார். இதற்கிடையே ஏற்கனவே பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் கட்காரி விவேகானந்தரையும், தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் தானாக முன்வந்து மன்னிப்பும் கேட்டார். இப்படிப்பட்ட சூழலில் பாஜகவின் உயர் மட்டக் கூட்டம் நேற்று நடந்தது. ஆனால், கட்காரியை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் மூத்த தலைவர் அத்வானி இக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார். அதே போல கட்காரியும் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான குருமூர்த்தி கட்காரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தான் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை சமர்பித்தார். அதில், கட்காரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில் சட்டமீறல்கள் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நிருபர்களை சந்தித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், கட்சியின் தலைவரான கட்காரி எந்தத் தவறும் செய்யவில்லை என்று குருமூர்த்தியே கூறிவிட்டார். அவர் சட்ட விரோதமான எந்தத் தவறுகளையும் செய்யவில்லை; அவர் எத்தகைய விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளார்; அவர் மீது கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனால் அவரே பாஜக தலைவராகத் தொடர்வார் என்று அறிவித்தார்.
ஆனால், ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த குருமூர்த்தி ஆர்எஸ்எஸ் பின்பலம் கொண்ட கட்காரிக்கு ஆதரவாகத் தந்த அறிக்கையை வைத்துக் கொண்டு கட்காரி தவறே செய்யவில்லை என்று பாஜக கூறுவது பெரும் கேலிக்கூத்தாகவே கருதப்படுகிறது.இதே போல தன் மீது குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, ஒரு காங்கிரஸ் ஆடிட்டரை வைத்து தனக்கு ஆதரவாக அறிக்கையை சமர்பிக்க வைத்துவிட்டால், வதேரா தவறு செய்யாதவர் ஆகிவிடுவாரா?.நரேந்திர மோடிக்கு செக் வைக்க ஆர்எஸ்எஸ் முயற்சி: கட்காரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் அந்த இடத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அல்லது அவரது தீவிர ஆதரவாளரான அருண் ஜேட்லியோ பிடித்துவிடக் கூடும் என்று ஆர்எஸ்எஸ் கருதுகிறது. நரேந்திர மோடி பிற தலைவர்கள் யாரையும் மதிக்க மாட்டார் என்பதால் அவரை ஆர்எஸ்எஸ் ஒதுக்கியே வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கட்காரியை காப்பாற்ற ஆர்எஸ்எஸ் தீவிரமாக முயன்றுள்ளது. அதை மகா திறமையான குருமூர்த்தி மூலம் செய்தும் காட்டிவிட்டது. ஆர்எஸ்எஸ்ஸால் நெடுங்காலமாகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்வானி தனக்கு மீண்டும் கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்து வருகிறார். அதே போல சுஷ்மாவுக்கும் அந்த ஆசை உண்டு.
ஆனால், கட்காரியை தலைவர் பதவியில் தொடர வைத்துள்ளதன் மூலம் மோடி, அத்வானி, ஜேட்லி, சுஷ்மாவுக்கு செக் வைத்துவிட்டது ஆர்எஸ்எஸ். யாரும் வெளியே பேசக் கூடாது.. பாஜக தடை:இந் நிலையில் கட்சியின் விவகாரங்கள் குறித்து வெளியில் கருத்து எதையும் தெரிவிக்கக் கூடாது என்றும் அனைத்துத் தலைவர்களுக்கும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கட்சியில் பிரச்சனையே இல்லை என்று மக்கள் நினைப்பார்கள் என்று பாஜக நினைக்கிறது போல.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்