முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஒப்படைத்த மின்சாரம் தமிழகத்திற்கு கிடையாதாம்!

சனிக்கிழமை, 10 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 10 - டெல்லி ஒப்படைத்த மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு மின் பாதை வசதி இல்லை. அதனால் தமிழகம் கோரும் மின்சாரத்தை வழங்க இயலாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து தென் மண்டல மின் பாதையின் திறன் குறித்து ஆய்வு செய்து வரும் 29 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மின்சார ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு தேவையில்லை என்று ஒப்படைத்த 1,791 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், எஸ்.எஸ். நிஜ்ஜார், ஜஸ்தி செல்மேஸ்வர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி வாதிட்டார். தமிழகம் கோரும் மின்சாரத்தை மின் மண்டலத்தில் இருந்து அம்மாநிலத்துக்கு விநியோகிக்கும் அளவுக்கு போதிய மின் பாதை வசதியில்லை. தமிழகம் கோருவது போல் 1723 மெகாவாட் மின்சாரத்தை வழங்கினால் தென் மண்டல மின் பாதையில் சேதம் ஏற்படும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு அந்த மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்முகுல் ரோத்தகி எதிர்ப்பு தெரிவித்தார். தென் மண்டல மின்பாதை மூலம் வேறு மின் மண்டலத்தில் இருந்து தமிழகத்துக்கு கடந்த ஆண்டு மின்சாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அப்படி இருக்கும் போது தற்போது இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது. ஆகையால் டெல்லி ஒப்படைத்த மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த விவகாரம் குறித்து தொழில் நுட்ப நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் அறிக்கையை வரும் 29 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்