அதிபர் ஒபாமா மியான்மர் பயணம் செல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 11 - அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பராக் ஒபாமா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மியான்மார் செல்கிறார். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நாட்டில் ஜனநாயகம் மீண்டும் தழைத்து வருவதையடுத்து அதை மேலும் ஊக்குவிக்கம் வகையில் இந்தப் பயணத்தை ஒபாமா மேற்கொள்ள உள்ளார். கம்போடியா நாட்டில் போனம்பென் நகரில் வரும் 18 ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டிலும் ஒபாமா பங்கேற்கிறார். அதற்கு முதல் நாள் அவர் மியான்மர் செல்கிறார். மியான்மரில் சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டு வீட்டுச் சிறையில் பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த சூ கியும் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கம்போடியா பயணத்தை முடித்துக் கொண்டு தாய்லாந்துக்கும் செல்கிறார் ஒபாமா. கம்போடிய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்கிறார். அப்போது ஒபாமாவையும் சிங் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவை மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அப்போது, மீண்டும் இந்தியாவுக்கு வருமாறும் ஒபாமாவுக்கு மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஒபாமாவும், மன்மோகன் சிங்கும் பல முறை சந்தித்து பேசி உள்ளனர். ஒபாமா கடந்த 2010 ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்த போது, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சில இந்திய நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: