முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருந்து

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நவ.- 12 - பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்தார். பாராளுமன்ற குளிர்கால கூட்டம் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று அந்த கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது. அந்த கட்சியில் 18 எம்.பி.க்கள் உள்ளனர். மேலும் தி.மு.க.வையும் நம்ப முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. அதனால் கூட்டணியில் இல்லாத பகுஜன்சாமஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் ஆதரவை உறுதி செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு தலைவரையும் விருந்துக்கு அழைப்பதாக அழைத்து அவர்களுடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய 7 ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் விருந்துகொடுத்து பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வர உள்ள நம்பிககையில்லா தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. நேற்று மாயாவதியை அழைத்து விருந்து கொடுத்தார். இந்த விருந்தின்போது பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத்தும் உடன் இருந்தார். இந்த விருந்துக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாயாவதி, மத்திய அரசுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறோம். அரசியல் சம்பந்தமான இந்த சந்திப்பு குறித்து வெளியே எதுவும் கூறமுடியாது. அதனால் அதுபற்றி அதிகம் கேட்காதீர்கள் என்று நிருபர்களிடம் கூறிவிட்டு சென்றார். உத்திரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் நேற்றுமுன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்