புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் மரணம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      உலகம்

 

கொழும்பு,பிப்.21  - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 81. 

நீரழிவு மற்றும் இதயக் கோளாறு போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள். இவருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இவர் இலங்கைக்கு திரும்பி யாழ்ப்பாண நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த பார்வதியம்மாள் நேற்று காலையில் மரணமடைந்தார். இந்த தகவலை விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணியின் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவித்தார். 

பார்வதியம்மாள் மறைந்து விட்டார். அவருக்கு நான் இறுதி அஞ்சலி செலுத்தினேன் என்று சிவாஜிலிங்கம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை மண்டல மருத்துவமனையில் பார்வதியம்மாள் சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று காலை அவர் மரணமடைந்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி கிராமம்தான் வல்வெட்டித்துறை. இது பிரபாகரனின் சொந்த ஊர் என்று கூறப்படுகிறது. மரணமடைந்த பார்வதியம்மாள் கடந்த மாதம் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் ஏற்கனவே பக்கவாதம் போன்ற நோய்களால் அவதிப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: