முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`துப்பாக்கி' படம்: தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மனு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.16 -  ​`துப்பாக்கி' படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று  உள்துறை செயலாளரிடம் நடிகர் விஜய் மனுஅளித்தார். விஜய் நடித்துள்ள `துப்பாக்கி' படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் துப்பாக்கி படம் ஓடும் தியேட்டர்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி வரும் தேசிய லீக் கட்சியினர், விஜய் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து விஜய் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, நடிகர் விஜய் ஆகியோர் சென்னையில் உள்ள 18 முஸ்லிம் அமைப்பின் தலைவர்களுக்கு நேற்று இந்த படத்தை போட்டு காண்பித்து விளக்கம் அளித்தனர். அதன்பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து  மீண்டும் தங்கள் குழுவினருடன் ஆலோசித்து முடிவு செய்வதாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று  முஸ்லிம் தலைவர்கள் கூட்டம் நடந்தது .

இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று  தமிழக உள்துறை செயலாளரை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், துப்பாக்கி படத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சி குறித்தும் விஜய் விளக்கம் அளித்தார். அவருடன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உடன் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்