முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம்: போப் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, நவ.16 -​ தமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு முத்தி பேறு பெற்ற மறை சாட்சியாக (அருளாளர் பட்டம்) போப்பாண்டவர் 16-​ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார். தேவசகாயம் பிள்ளை இந்தியாவின் முதல் பொது நிலை மறைசாட்சியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.  கோட்டாறு மறை மாவட்ட கத்தோலிக்க பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உலக கத்தோலிக்க திருச்சபையில் இறை உறவில் சிறந்த நிலையை அடைந்தவர்களே புனிதர்கள். இந்த மறை சாட்சியின் பரிந்துரையால் இறைவனிடம் இருந்து அதிக நன்மைகளை பெற முடியும் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். இந்த வரிசையில் தமிழ் நாட்டில் வாழ்ந்து மறைந்த தேவசகாயம் பிள்ளையை முத்தி பேறு பெற்ற மறை சாட்சியாக (அருளாளர்) போப் பாண்டவர் 16-​ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார்.

புனிதர் நிலைக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வணக்கத்துக்கு உரியவர், அருளாளர் (முக்தி பேறு பெற்றவர்) என்ற இரு நிலைகளையும் தாண்ட வேண்டும். தேவசகாயம் பிள்ளைக்கு இறை ஊழியர் என்ற கவுரவம் 2003-ம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது ரோமில் உள்ள புனிதர் பட்ட குழுவின் திருப்பேராய தலைவர் கர்டினால் ஆஞ்சலோ அமாஸ்தோ பரிந்துரையின் பேரில், தேவசகாயம் பிள்ளையை முக்திபேறு பெற்றவராக அறிவிக்க 28.6.2012 அன்று போப் ஆண்டவர் 16-​ம் பெனடிக்ட் அனுமதி வழங்கினார். 

தேவசகாயம் பிள்ளை இந்தியாவின் முதல் பொது நிலை மறைசாட்சியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். 

தற்போதைய நடைமுறைப்படி புனிதர் பட்டம் வழங்குவதற்கு முந்தைய விழாவான முக்திபேறு (அருளாளர்) பட்டம் வழங்கும் விழா சம்பந்தப்பட்ட மறை மாவட்டத்தில் தான் நடத்தப்படுகிறது. தேவசகாயம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் முத்திபேறு பெற்றவர் (அருளாளர்) என்று அறிவிக்கும் விழா வருகிற டிசம்பர் 2-​ந்தேதி நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இது கர்டினால் ஆஞ்சலோ அமாஸ்தோ தலைமையில் நடக்கிறது. இதில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள். புனிதர் நிலையை அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறைபணி புரியும் போப், கர்தினால், பிஷப், குருக்கள், கன்னியர்கள் போன்ற துறவியர்களாவர். ஆனால் தேவசகாயம் பிள்ளை கத்தோலிக்க திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்ற சாதாரண குடிமகன்.

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை முக்திபேறு பெற்றவராக அறிவிக்கப்படுவதால் அவருக்கு இனி பாதுகாவலாகக் கொண்டு ஆலயங்கள் அமைக்கலாம். சொரூபங்கள் வைக்கலாம். புகழ் மாலை, ஜெபம் அனைத்துக்கும் தகுதியானவர் ஆகிறார். தேவசகாயம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா நட்டாலம் கிராமத்தில் 1712-​ம் ஆண்டு ஏப்ரல் 23-​ந்தேதி பிறந்தார்.

மாணவர் பருவத்தில் குமரி மாவட்டம் பறைகோடு கிராமத்தில் குருகுல கல்வி கற்றார். ஜாதி மதங்களை கடந்து மனிதநேயத்தை கருத்தில் கொண்டு வாழ்ந்தார். 1740-​ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரசு பணியில் சேர்ந்தார். 1745-​ல் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பங்கு தந்தை புத்தாடி அடிகளிடம் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர் ஆனார்.

கிறிஸ்தவ பணி ஆற்றிய இவர் ஆரல்வாய்மொழி காத்தாடிமலையில் 1752-​ம் ஆண்டு ஜனவரி 14-​ந்தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இவரது உடல் கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த அல்போன்சா புனிதர் பட்டம் பெற்றுள்ளார். அன்னை தெரசாவை தொடர்ந்து இப்போது தேவசகாயம் பிள்ளைக்கு முக்திபேறு (அருளாளர்) பட்டம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், பாதிரியார்கள் டேவிட் மைக்கேல், சகாயதாஸ், அருட்பணி மைய இயக்குனர் இக்னேஷியஸ் தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்