இஸ்ரேல் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனவர் பலி!

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

காசா, நவ. 21 - பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் நீடித்து வருகிறது. இரவு பகல் பாராமால் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தருகிறோம் என்பது இஸ்ரேலின் கருத்து. கடந்த புதன்கிழமை முதல் ஓய்வின்றி சின்னஞ்சிறிய காசா பகுதி மீது குண்டுமழை பொழிந்து வருகிறது இஸ்ரேல். இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி பலியானார். குழந்தைகள், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இஸ்ரேலின் குண்டுவீச்சில் காசாவில் ஒரு வீட்டில் வசித்து வந்த மூன்று தலைமுறையைச் சேர்ந்த 11 பேர் அப்படியே சமாதியாகிப் போயினர். காசா பகுதியில் இயங்கி வரும் ஊடக நிறுவனங்கள் மீதும் குண்டு மழை பொழிந்துவருகிறது இஸ்ரேல். அந்த நாட்டின் தொடர்ச்சியான தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீனம் மீது வான்வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழித் தாக்குதலை நடத்த கடந்த சில நாட்களாகவே தயாராகி வருகிறது. தரைவழியேயும் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டால் ஹமாஸ் இயக்கத்துடன் அரபு நாடுகள் இணையக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இணைந்தால் 1960களில் நடைபெற்ற 6 நாள் யுத்தம் மீண்டும் அரங்கேறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் 3 போர்க் கப்பல்கள் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்கு அதாவது இஸ்ரேலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற விரும்பினால் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கப்பல்கள் செல்வதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ்ரானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இஸ்ரேலைக் காக்க 4 போர்க் கப்பல்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் கூடுதல் போர்க்கப்பல்கள் அப்பகுதிக்கு விரைவு அப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இதனிடையே இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் நிறுத்தத்துக்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: