சரப்ஜித் சிங் கருணை மனுவை பாக்., நிராகரிக்க வாய்ப்பு?

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 22 - அஜ்மல் கசாப் தூக்கிடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய மரண தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக இஸ்லாமாபாத் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1990 ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், குண்டு வெடிப்புக்கு சதி வேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட். 

ஆனால் குடிபோதையில் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து விட்டேன் என்பதுதான் சரப்ஜித் சிங்கின் வாதம். பொய்குற்றச்சாட்டின் கீழ் சரப்ஜித்சிங் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது என்கின்றனர் அவரது உறவினர்கள். கடந்த 21 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் இருந்து வருகிறார். தன்னை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு சரப்ஜித் சிங், பாக் அதிபர் சர்தாரிக்கு சமீபத்தில் கருணை மனு சமர்ப்பித்துள்ளார். இந்த மனு அதிபரின் பரிசீலனையில் இருப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறியிருந்தன. 

இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஜ்மல் கசாபை நேற்று காலை தூக்கில் போட்டுவிட்டது இந்தியா. இது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவுக்கு எதிராக அமைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. கசாபை தூக்கிலிட்டதால், இப்போது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை அதிபர் சர்தாரி நிராகரித்துவிட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: