முக்கிய செய்திகள்

நிலத்தகராறில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
AIADMK flag 3

தஞ்சை.ஏப்.14 - தஞ்சை அருகே நிலத்தகராறில் அதிமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற திமுகவினரை போலீசா வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் சர்க்கரை ஆலை அடுத்துள்ள மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம். இவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை அதேபகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் குத்தகைக்காக பெற்று விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த நிலத்தை திருக்கானூர்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வாங்கி உள்ளாராம். 

இதில் முருகேசனுக்கும், கைலாசத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இந்த வழக்கு தஞ்சை சப் கோட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 8 மாதத்திற்கு முடிவுக்கு வந்தது. இதில் கைலாசத்திற்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பளித்தது. 

இதில் கைலாசத்திற்கும், முருகேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மின்னாத்தூர் பகுதியை சேர்ந்த முகுகேசன், ரஜினி, ஆனஸ்ட்ராஜ், ஆனந்தி ஆகியோர் நேற்று கைலாசத்தின் மகன் ரவி(45) என்பவரை தகராறு செய்து ரவியை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க முயன்ற அதேபகுதியை சேர்ந்த சின்னையா மகன் காமராஜ் மகனுக்கும் இடது கையில் வெட்டு விழுந்தது.  இவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் உடனே சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அதேகும்பல் கைலாசத்தின் மற்றொரு மகன் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கருப்பன் என்ற கருப்பையா என்பவரை அரிவாளால் தலையில் வெட்டினர். மேலும் தடுக்க முயன்ற கருப்பையாவின் உறவினர் வெற்றிவேலுக்கும் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையாவின் பிரதேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து ஒரு வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இறந்த கருப்பையா மற்றும் வெட்டுக்காயம் ஏற்பட்ட ரவி அதிமுக பிரமுகர்கள் ஆவர். வெட்டிய முருகேசனின் ஆதரவாளர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: