பாக்., தற்கொலைப் படை தாக்குதலில் 37 பேர் சிதறி பலி

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ. 25 - பாகிஸ்தானில் ஒரேநாளில் மூன்று இடங்களில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 37 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். 90 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராவல்பிண்டியில் மொகரம் மாதத்தை முன்னிட்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் கடந்த புதன் கிழமையன்று இரவு ஊர்வலம் சென்றனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவன், ஊர்வலத்துக்குள் ஊடுருவ முயன்றான். சந்தேகப்பட்ட மக்கள், உடனடியாக ஓடி சென்று அவனை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் ஊர்வலத்தில் சென்ற 23 பேர் உடல் சிதறி பலியானார்கள். 68 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் கராச்சி இமாம்பர்காவுக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீதும் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பைக்கில் வந்த மர்ம ஆசாமி, அங்கிருந்த ஆட்டோ மீது மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். மீட்புப் படையினர் விரைந்து சென்ற போது, அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். 

பன்னு நகரில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் பலியாயினர். 20 பேர் காயம் அடைந்தனர்.

ஒரே நாளில் வெவ்வேறு தாக்குதலில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளர். இந்த தாக்குதல்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: