முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரங்குகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ரோந்து சுற்றிவரும் துப்பாக்கி ஏந்திய போலீசார்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஏப். 15- வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரங்குகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிய ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்தல் நடந்து அடுத்த நாளே ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற்றுவிடும். ஆனால் இந்த முறை தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வாக்குப் பதிவு இயந்திரத்தை தீவிரமாக பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. உசிலம்பட்டி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெறுகிறது. இதேபோல் திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் நடைபெறுகிறது. மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மத்தி, மேலூர், சோழவந்தான் ஆகிய 7 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை மதுரை மருத்துவக்கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகளில் இருந்து ஓட்டுப் பதிவு எந்திரங்கள் நேற்று அதிகாலை வரை வந்துசேர்ந்தது. அனைத்து இயந்திரங்களும் அந்தந்த அறைகளில் வைக்கப்பட்டு, நேற்று பகல் 12 மணியளவில் தேர்தல் அலுவலர் சகாயம் முன்னிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் பார்வையிட அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அறைகளை சுற்றி ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ஒரு டி.எஸ்.பி. ஒரு துணை ராணுவ அதிகாரி, தாசில்தார் அந்தஸ்த்தில் உள்ள ஒரு அதிகாரி மற்றும் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மையங்களைச் சுற்றி அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மே 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்