முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கட்சிக்குள்ளேயே நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால் அவரது கட்சித் தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட தங்கபாலுவின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார். தங்கபாலு டம்மி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு பரிசீலனையின்போது தங்கபாலு மனைவியின் வேட்புமனு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு போட்டியிட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்பு காங்கிரஸ் மகளிர் பிரிவினர் போராட்டத்திலும், தீக்குளிப்பு முயற்சியிலும் ஈடுபட்டனர். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தங்கபாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கபாலு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி 19 பேரை நீக்கினார். சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி, காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் செங்கை செல்லப்பன், எஸ்.வி.சேகர் உட்பட 19 பேரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தங்கபாலு அதிரடியாக நீக்கி அறிவித்தார். இதற்கு நீக்கப்பட்ட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களை நீக்க தங்கபாலுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினர். 

மேலும் நீக்கப்பட்ட இந்த 19 பேர்களில் கராத்தே தியாகராஜன், கவுன்சிலர் சாந்தி, மயிலை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசேகர் உள்பட 8 பேர் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீக்கத்திற்கு ப.சிதம்பரமும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் தங்கபாலு மீது கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். மேலும் சோனியா காந்தியை ப.சிதம்பரம் நேற்று முன்தினம் சந்தித்து தமிழக காங்கிரஸ் நிலைமையை எடுத்துக்கூறினார். தங்கபாலுவின் நடவடிக்கையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதிக்கும் என்றும் சோனியாவிடம் சிதம்பரம் எடுத்துக்கூறியதாக தெரிகிறது. தங்கபாலுவின் எதிர்ப்பாளர்களான தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ், இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர் ஆவார். எஸ்.சி., எஸ்.டி மாநில தலைவர் செங்கை செல்லப்பன், ஜெயக்குமாரின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கபாலுவின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகிகள் ஆகியோரை நீக்கும் அதிகாரம் தங்கபாலுக்கு இல்லை. மேலிடத்தின் அனுமதிபெறாமல் தன்னிச்சையாக அவர் செயல்படுகிறார். இதன் மூலம் தங்கபாலு மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார். 

முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியிலிருந்து தங்கபாலு நீக்கியுள்ளார். அவர்களை நீக்குவதற்கு தங்கபாலுக்கு அதிகாரமில்லை. தங்கபாலுவின் இந்த நடவடிக்கையானது முற்றிலும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் செயலாளர் ராகுல்காந்தியிடம் புகார் செய்வோம் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார். 

தங்கபாலு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் பேட்டியளிக்கையில் தங்கபாலு தன்னிச்சையாக செயல்படுகிறார். கட்சி விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்