முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகையில் ராம்னிக்கு அதிபர் பாரக்ஒபாமா விருந்து

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், டிச. - 1 - தன்னை எதிர்த்து அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற மிட் ராம்னிக்கு, அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்து கொடுத்தார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஒருவர் மீது ஒருவர் சளைக்காமல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியவர்கள், நேற்று ஒரே மேசையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். முன்னதாக, வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஒபாமா, ராம்னிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்றுக்கொண்ட ராம்னி நேற்று, கறுப்பு நிற எஸ்.யூ.வி யில், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனியாக வந்திருந்தார். கார் கதவைக்கூட தானே திறந்து, மூடிக்கொண்டார். வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள அறையில், தெற்கு பகுதியில் உள்ள புல்வெளியை பார்க்கும் வண்ணம் அமர்ந்து இருவரும் உணவருந்தினர். ஒபாமாவும் ராம்னியும் சுமார் 70 நிமிடங்கள் தனியாக பேசிக்கொண்டனர். மீண்டும் வெற்று பெற்று அதிபர் ஆகியுள்ள ஒபாமாவுக்கு தேர்தல் வெற்றிக்காகவும், அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சிக்காகவும் கவர்னர் ராம்னி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் என வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இருவரும் தொடர்பில் இருந்து கொள்ள விரும்புவதாகவும், இருவருக்கும் விருப்பமான விஷயங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தன்னை எதிர்த்து உட்கட்சி தேர்தலில் தீவிரமாக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனை, தனது பிரதான அமைச்சராகவும், இன்னொருவரான ஜோ பைடனை துணை அதிபராகவும் அமர்த்திக் கொண்டவர் ஒபாமா. கூடுதலாக எதிர்க்கட்சியை சார்ந்தவர்களையும் தனது அமைச்சர்களாக வைத்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் ராம்னிக்கு ஏதாவது முக்கிய பதவியைத் தர ஒபாமா விருப்ப்படுவதாக தெரிகிறது. ஒபாமா - ராம்னியின் முதல் சந்திப்பு அந்த எதிர்ப்பார்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளது. மற்றொரு பக்கம், பொருளாதார தேக்கநிலை அபாயத்தை தடுப்பதற்காக, குடியரசுக் கட்சி தலைவர்களுடன் ஒபாமாவின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ்ஈடுபட்டுள்ளனர். ஒபாமாவும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஜான் பேனருடன் பேசிக்கொண்டிருக்கிறார். 250 ஆயிரம் டாலர்களுக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியை அதிகரிக்க வேண்டும். 200 ஆயிரம் டாலர் வரை வருமானம் உள்ளவர்களுக்கு பழைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்துகிறார். குடியரசுக் கட்சியினரோ, பணக்காரர்களுக்கும் வருமான வரியை உயர்த்தக்கூடாது என்று அடம் பிடிக்கின்றனர். இரு கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்படுவதற்கு ராம்னியும் உதவுவாரா என்ற எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன. தேர்தலில் நேருக்கு நேர் ஒருத்தரை ஒருத்தர் கடுமையாக சாடிக்கொண்டாலும், தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இருவரும் ஒன்றாக விருந்துண்ணும் காட்சி அமெரிக்க அரசியலில் சாதாரணமே என்றாலும், ஒபாமா ஒரு படி மேலே போய் யாரையும் பகையாக நினைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தொடர்ந்து அவர்களுடன் இணைந்து பணியாற்றி, திறமையை பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார் என்று சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்