முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானி மீதான விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச.8 - பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு ரேபரேலி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக ராய் பரேலியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. மசூதி இடிக்கப்பட்டபோது, அந்த இடத்தில் போடப்பட்டிருந்த மேடையில் கூடியிருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட 19 முக்கிய தலைவர்கள் மீது ஒரு வழக்கும், சர்ச்சைக்குரிய இடத்தில் திரண்டிருந்த  லட்சக் கணக்கான கரசேவகர்கள் மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி மற்றும் இதர தலைவர்களுக்கு எதிரான வழக்கை 2001 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், 2010 ஆம் ஆண்டு சி.பி.ஐ நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. எனினும், கரசேவகர்கள் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில் அத்வானி மற்றும் இதர தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதிகள் ஹெச்.எல். தத்தூ மற்றும் மற்றும் சி.கே. பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி மீது தொடரப்பட்டுள்ள மற்றொரு வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு ராய் பரேலி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் வாதாடுவதற்காக ஆஜராகாத கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.சாண்டியோக்குக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை சாதாரணமாக கருதுவதாக குற்றம் சாட்டினர். பால் தாக்கரே சமீபத்தில் மறைந்ததையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட நபர்கள் பட்டியலிலிருந்து அவர் பெயரை நீக்கவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்