முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மின்சாரத்தை தமிழகத்திற்கு அளிப்பது குறித்து உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 9  - டெல்லி மாநில அரசு திரும்ப ஒப்படைத்த 1721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு அளிப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநிலம் தேவையில்லை என்று ஒப்படைத்த மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு கடந்த அக்டோபர் 23 ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து அக்டோபர் 29 ம் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி ஜலமேஸ்வர், நீதிபதி சுவீந்தர்சிங் ஆகியோரடங்கிய பெஞ்ச் தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தருமாறு மத்திய அரசுக்கும், மத்திய மின்சார வாரியத்திற்கும் உத்தரவிட்டது. 

தமிழகத்திற்கு டெல்லி மின்சாரத்தை அனுப்புவதற்கு போதுமான சக்திவாய்ந்த வழித்தடம் இல்லாததால் தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்கள் மின் வழித்தடத்தை ஆராய்ந்து அது போதுமான கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதன் மீது நேற்று விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசின் பதில் மனு மீது மத்திய அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்