முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினரின் வன்முறையிலிருந்து காப்பாற்ற விஜயகாந்த் கோரிக்கை

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - தி.மு.க.வினரின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து மக்களின் உயிரையும், உடமையும் காப்பாற்ற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரியுள்ளார்.இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரும் தி.மு.க., காங்கிரஸ் கட்டணியினரின் சமூக விரோத செயல்கள் முடிந்தபாடில்லை. நமது கூட்டணி கட்சியினரை தொடர்ந்து தி.மு.க.வினர் தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, ஜெயபால், அவரது மனைவி பிரச்சனகுமாரி, தம்பி சுகந்தராஜ் ஆகியோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களால் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் ஜெயபால் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. 

வேடசந்தூர் தொகுதியிலுள்ள சேவுகவுண்டச்சிபட்டியில் தே.மு.தி.க.வினரை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் நன்மங்கலம் பகுதியில் தே.மு.தி.க கிளைச் செயலாளர் வசந்தவேலு வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டு கொளுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றிய தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அசோகன் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளேன். 

காரைக்கால் தெற்கு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட அசனா சொந்த வீட்டிலிருந்தபோது தி.மு.க.வைச் சேர்ந்த கொலை வெறிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியினரின் வன்முறை தொடர்ந்து வருகிறது. வருகிற மே மாதம் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இப்பொழுதே இத்தகைய வன்முறையில் ஈடுபடுவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டால் எத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதை யாரும் யூகிக்க முடியாது. முளையிலேயே இத்தகைய வன்முறையாளர்கள் மீது காவல் துறை பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே விளைவுகளை தவிர்க்க முடியும்.

தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்ட கழக தோழர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், தாக்கியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவும், மேற்கொண்டும் கொலை வெறி தாண்டவம் நடைபெறாமல் இருக்க தே.மு.தி.க.விலுள்ள கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை  மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். 

காபந்து சர்க்காராக இருக்கின்ற பொழுதே தி.மு.க.வினர் இத்தகைய மிருகவெறி செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை பார்க்குமிடத்து, இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்கு புரியவில்லை. இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே தயவு தாட்சண்யமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.க. குண்டர்களை உடனடியாக கூண்டில் அடைக்க  வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறும் என்பதால், காலாவதியாகிவிட்ட முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு கருணாநிதி குறை சொல்கிறார் என்பதை பொருட்படுத்தாமல், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷனும் முறையே ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்