முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பணம்: புது சட்டத்தை அமல்படுத்த சுவிஸ் முடிவு

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

பெர்ன், டிச. 18 - உலகிலுள்ள பலவேறு நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க, அந்நாட்டு அரசு விரைவில் புது சட்டத்தை கொண்டு வர உள்ளது. 

இந்திய தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரும் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிஸ் நாடு கறுப்பு பணம் பதுக்குவோரின் புகலிடமாக உள்ளது என உலக நாடுகள் பலவும் கூறி வருகின்றன. இந்த கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசும் அறிவித்தது. மேலும் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள், இப்படி கறுப்பு பணத்தை பதுக்குவதற்கான புகலிடமாக சுவிட்சர்லாந்து வங்கிகள் விளங்குவதை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றன. 

இந்தநிலையில் புது சட்டத்தை இயற்றுவது தொடர்பாக வரைவு மசோதா ஒன்றை புத்தாண்டில் அளிக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசின் சார்பில் முடிவு எடுக்கிற உயர் அமைப்பான சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில், அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்ன் நகரில் நடந்த பெடரல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சுவிஸ் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஒடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. 

வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகள், மூலமான பணம் முதலீடு செய்யப்படாமல் இருக்க, இரு நாடுகளுக்கும் இடையே, வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதாவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் முதலீடு செய்யவரும் வாடிக்கையாளர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு பெற வேண்டும்.இது தொடர்பாக, மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். இதன் பின் புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

எனவே புத்தாண்டில் கறுப்பு பண பதுக்கலுக்கு எதிரான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வந்து விட்டால், வங்கிகள் மட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் உள்ள நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் கணக்கில் வராத யாருடைய பணத்தையும் எந்த நாட்டிலிருந்தும் பெற முடியாத நிலை உருவாகி விடும். அது கறுப்பு பண முதலைகளுக்கு பெருத்த அடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்