முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலிருந்து ஜெயலலிதா வெளிநடப்பு

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.28 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கோபத்துடன் வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தேசிய வளர்ச்சி குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். அப்போது, அனைத்து மாநில முதல்வர்களுக்கு பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேச ஆரம்பித்தார். ஆனால் 10 நிமிடம் பேசுவதற்கு முன்பே மணி அடிக்கப்பட்டதால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து  வெளிநடப்பு செய்தார்.

முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தின் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் எனக்கு  10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தந்ததால் வெளிநடப்பு செய்தேன்.​  தேசிய வளர்ச்சி குழுமக் கூட்டத்தில்  முதலமைச்சர்கள் அதாவது மத்திய அரசை எதிர்க்கும் முதலமைச்சர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள்.  எடுத்த எடுப்பிலேயே நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு முதலமைச்சருக்கும் 10 நிமிடங்கள் தான் காலஅவகாசம் அளிக்கப்படும் என்றார்கள்.  அந்த 10 நிமிடங்கள் முடிந்துவிட்டால்  ஒரு மணி அடிக்கப்படும் என்றார்கள்.  நான் பேச ஆரம்பித்தேன்.   நான் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேனோ அதில் மூன்றில் ஒரு பங்குகூட சொல்லி முடிக்கவில்லை,   அதற்குள் மணியடித்துவிட்டு  நிறுத்திக்கொள்ளுங்கள் என்றார்கள்.    இது மிகப் பெரிய அவமானம்.  இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அவமானம் அல்ல,  தமிழ்நாடு மாநிலத்திற்கே,  தமிழக மக்களுக்கே இழைக்கப்பட்ட அவமானமாகத்தான் கருதப்படவேண்டும்.   இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் இதுபோன்ற ஒரு பழக்கம் இருந்ததில்லை.   ஏற்கனவே நான் பல கூட்டங்களில்  பிரதமர் கூட்டிய பல முதலமைச்சர்கள் மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.   இதுவரை இப்படிப்பட்ட ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்படவில்லை,  இப்படிப்பட்ட ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.   இதற்கு முன்பு நான் கலந்து கொண்ட கூட்டங்களில் எத்தனையோ முதலமைச்சர்கள்,  மத்திய அரசை ஆதரிக்கும் முதலமைச்சர்கள் 30 நிமிடங்கள், 35 நிமிடங்கள் என்றெல்லாம் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  கடைசியாக  இதற்கு முன்பு நான் கலந்துகொண்ட முதலமைச்சர்கள் மாநாட்டில்கூட  அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் 35 நிமிடங்களுக்குமேல்  பேசினார்.  அப்போதெல்லாம் யாரும் அவரை நிறுத்திக்கொள்ளுமாறு சொல்லவில்லை,  கட்டளையிடவில்லை, மணியடிக்கவில்லை.   இன்று நான் பேசத் தொடங்கியதும்  10 நிமிடங்கள் ஆவதற்குள் மணியடித்து என்னை அவமானப்படுத்திவிட்டார்கள், கேவலப்படுத்திவிட்டார்கள்.   ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அந்த மாநிலப்  பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்காக 10 நிமிடங்கள் எந்த மாநில முதல்வருக்கும் போதாது.  10 நிமிடங்களுக்குள் அந்த மாநிலம் சம்பந்தபட்ட அத்தனை பிரச்சினைகளையும் எடுத்துச் சொல்ல முடியாது.   12-வது ஐந்தாண்டு திட்டம்  என்ற ஆவணம் மிக நீnullண்டதொரு  ஆவணம்.  அதிலுள்ள பொருட்களைப்பற்றியெல்லாம் பேசவேண்டுமென்றால்  நிச்சயமாக  10 நிமிடங்களுக்குள் யாரும் எதையும் சொல்லி முடிக்கமுடியாது.  10 நிமிடங்களுக்கு மேல் ஒதுக்குவதற்கு தயாராக இல்லையென்றால்,  மத்திய அரசு ஏன் எங்களை அழைக்கவேண்டும்? இவ்வளவு துரம்  டில்லிக்கு வருமாறு  முதலமைச்சர்களை   ஏன் அழைக்கவேண்டும்?   அழைத்துவிட்டு எங்களை பேச அனுமதிக்காமல்  எங்கள் குரல்வளையை நெரித்துவிட்டு  எங்களை ஏன் இப்படி கேவலப்படுத்த வேண்டும்?   ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும்?   என்பதுதான் என்னுடைய கேள்வி.   இதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில்  நான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு வந்திருக்கிறேன்.   ஆகவே மத்திய அரசு தனக்கு ஆதரவாக இல்லாத எதிர்ப்பு தெரிவிக்கும் முதலமைச்சர்களை பேச அனுமதிக்காமல்  இப்படியொரு  புதிய  அடக்குமுறையை தொடங்கியிருக்கிறார்கள்.  இதற்கு   மீண்டும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கோபத்துடன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்