முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் வெளிமாநில பச்சரிசி

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - ரேஷன் கடைகளை கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், பொங்கல் பண்டிகைக்கு வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தரமான பச்சரிசி வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கூறினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் முதலான அத்தியாவசியப் பொருட்கள் பொது விநியோகத் திட்டக் கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படுவதையும், குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து பொருட்களையும் பெறுவதை உறுதி செய்திடும், ஆய்வுக்கூட்டம், நேற்று  காலை 11 மணி அளவில்  (27.12.2012) தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ்  தலைமையில் நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ்  1 கோடியே 84  லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான புழுங்கல் அரிசி, பச்சரிசி வழங்கவும்  சர்க்கரை,கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில் ஆகியன மானியவிலையில் தமிழ்நாட்டிலுள்ள 33,474 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாய விலை அங்காடிகள் மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அங்காடிகளிலும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஜனவரி 2013-​க்கான மாதாந்திர ஒதுக்கீட்டின்படி அனைத்து பொது விநியோக திட்ட கிடங்குகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் 5.1.2013-​க்குள் நகர்வு செய்து போதுமான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டுமென்று  உணவுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதன்படி  1.1.2013 முதல்  மாத இறுதி வரை அனைத்து அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.  

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்ஆணையின்படி ஆந்திரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தரமான  பச்சரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  விலையில்லாமல் வழங்கப்படும் . மேலும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான துவரம்பருப்பு  உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியனவும் மானியவிலையில் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி கொள்முதல் செய்யப்படும் 21 ஆயிரத்து 700 மெ. டன் பாமாயில்  சென்னை துறைமுகத்திற்கு மூன்று கப்பல்கள் மூலமும் துத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு கப்பல் மூலம்       8,000 மெ.டன்   பாமாயிலும்  கொண்டுவரப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை 1.1.2013 முதல் 31.12.2013 வரை செல்லத்தக்கதாக மேலும் ஓராண்டிற்கு nullநீட்டிக்கப்பட்டு, ஜனவரி​2013 மற்றும் பிப்ரவரி ​2013  மாதங்களில் அங்காடிகளில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெற உள்ளது.  இதன்படி குடும்பத் தலைவர் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட  குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர்  குடும்ப அட்டையை நியாயவிலைக் கடைகளுக்கு எடுத்துச்சென்று,  2013ஆம் ஆண்டிற்கான உள்தாளை இணைத்து பெற்றுக்கொண்டு நியாயவிலைக் கடைகளில் பராமரிக்கப்படும்  வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின்படி குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி இப்புதுப்பித்தல் பணியை நிறைவேற்றிக் கொண்டிடும் வகையிலும்,  கூட்ட நெறிசலை தவிர்க்கும் பொருட்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க  நியாயவிலைக் கடைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.  திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி முறையில் தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பிக்க, தவிர்க்க முடியாத காரணங்களால்  அங்காடிக்கு வரஇயலாதவர்கள் அந்த வாரத்தில் சனிக்கிழமை கடைக்கு வந்து அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம். 

 மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மாதாந்திர  ஒதுக்கீடான       52,806 கி.லி மண்ணெண்ணெய்யை  ஜுன்​2011​ல் 44,580 கி.லி. எனக்குறைத்து தற்போது  கடந்த 9 மாதங்களாக டிசம்பர் 39,429 கி.லி.எனக்குறைத்து , ஒதுக்கீடு செய்து  வருகிறது.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டின், மண்ணெண்ணெய் தேவையான 65,140 கி.லி. முழுவதையும் வழங்க, பாரதபிரதமரை நேரிலும்,  கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  

ஆனால் மத்தியஅரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டினை சிறிதளவும் உயர்த்தி தரவில்லை.  இருப்பினும் குடும்ப அட்டைதாரர்கள்  அனைவருக்கும் மண்ணெண்ணெய் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுவிநியோகத்திட்ட கிடங்குகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இருப்பு வைத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளரின்  ஒதுக்கீட்டின்படி  அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படுவதை  உறுதி செய்திடவும், அங்காடிகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைத்தல், பொருள்களின் தரம் குறித்த புகார்கள், அங்காடிகளில் தரமற்ற பொருட்கள் காணப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பி தரமான பொருள்களை  பெறுதல் ஆகிய  பணிகளை கண்காணிக்கும் பொருட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.   

இந்த ஆய்வுக்கூட்டத்தில் உணவுத்துறை செயலாளர் நிர்மலா,  குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பஷீர் அஹமது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளர் ஏ.கலையரசி உணவு மற்றும்  கூட்டுறவுத்துறை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்