முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், டிச.28 - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜய் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பிறகு அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்திற்கு வந்த அவர் குழித்துறை, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அமைச்சர் விஜய் இங்கும் ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் பெண் நோயாளிகள் பிரிவுக்கு சென்று பார்வையிட்டார். பிறகு ஆண்கள் பிரிவுக்கும், தீவிர சிகிச்சைப்பிரிவுக்கும் சென்று பார்வையிட்ட அமைச்சர் விஜய் நோயாளி களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். 

அதை தொடர்ந்து நிர்வாக அலுவலகத்தில் டாக்டர்களுடன் அவர் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அமைச்சர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ.5,500 கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியை விட 40 சதவீதம் அதிகமாகும். கடந்த ஓராண்டுகளாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 60 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் இல்லை என்ற அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போதுமான அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் அரசு டாக்டர்களின் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிதாக 1500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

குமரி அரசு மருத்தவக்கல்லூரி மருத்தவமனையில் சகாய ஆன்றனி மிக்கேலாள் என்ற பெண்ணுக்க பிரசவத்தின்போது பாதிப்பு ஏற்பட்டிருப்பது எதிர்பாராதவிதமாக நடந்தது. இதில் பிரசவம் பார்த்த டாக்டரை குறை கூற முடியாது. சுக பிரசவத்தின் போது வாக்கோம் திரபி சிகிச்சை முறையில் எப்போதாவது இது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு. 

மலக்குழாய்க்கும், பிறப்புறுப்புக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்ய போடப்பட்ட தையல் செட் ஆகவில்லை. இனி 3 மாதத்திற்கு பின்பு அவற்றை தையல் போட்டு குணப்படுத்த முடியும். ஆபரேசன் மூலம் குழந்தை எடுப்பதை தவிர்த்த சுகபிரசவம் என்பதை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

அப்படி ஆரோக்கியமான விஷயத்திற்காக செய்த முயற்சியீயல் இது போன்ற சறுக்கல் நிகழ்ந்துள்ளது. எனவே மருத்தவ ரீதியிலான இச்சம்பவத்தில் யார் மீதும் குறை கூற முடியாது. இவ்வாறு அமைச்சர் விஜய் தெரிவித்தார். 

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் ஒத்துழைப்புடன் இது செயல் படுத்தப்படும். தற்போது இந்த ஆஸ்பத்திரிக்கு பொறுப்பு முதல்வராக ஸ்ரீராம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் நிரந்தர முதல்வர் நியமிக்கப்படுவார்.

அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ. அசோகன், நகரச் செயலாளர் சந்திரன், இளைஞர் அணி இணைச் செயலாளர் பள்ளவிளை ராஜேஷ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜான் சிலின் விஜிலா, நகர மகளிர் அணி செயலாளர் கலைவாணி உள்பட பலர் வரவேற்றனர்.

முன்னதாக தக்கலை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் குறை கேட்டார். சித்தா மருத்துவப் பிரிவில் நிலவேம்பு குடிநீர் ஒழுங்காக வினியோகம் செய்யப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.

அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜய், தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் சி.டி. ஸ்கேன் வசதி செய்யப்படும். பிரசவ டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்றார்.

மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், துணை இயக்குனர்கள் முத்துராஜ், சம்பத், மூத்த மருத்துவ அலுவலர் பிரணேஷ், மருத்துவ அலுவலர் முருகன், பத்மநாபபுரம் நகரசபை தலைவி சத்யாதேவி, துணைத்தலைவர் பீர் முகம்மது, அ.தி.மு.க. நகரச் செயலாளர் ஜெகபர் சாதிக், கவுன்சிலர்கள் உவைஸ், ராஜா, அண்ணா கட்டிட தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஜெகபர் உள்பட பலர் அமைச்சரை வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்