முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜரான தயாநிதி அழகிரியிடம் விசாரணை

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை,டிச.28  - கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் நேற்று ஆஜரான தயாநிதி அழகிரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெற்றதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பி., செல்வராஜ், ஒலம்பஸ் கிரானைட்  இயக்குனராக இருந்த தயாநிதிஅழகிரி, நாகராஜ் உள்பட ஏராளமானோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பி.ஆர்.பி., ராஜசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். ஆனால் மு.க.அழகிரி மகனும், ஒலம்பஸ் கிரானைட் இயக்குனராக இருந்த தயாநிதி அழகிரி போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் தயாநிதி அழகிரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் விசாரணை நடத்தி  நிபந்தனை முன் ஜாமீன் கொடுத்தனர்.

   ஐகோர்ட் கிளை நிபந்தனையின் படி  தயாநிதி அழகிரி தினமும் காலை 10.30 மணி அளவில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கையெழுத்து போட வந்த தயாநிதி அழகிரியிடம் மேலூர் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் சம்மன் ஒன்றை கொடுத்தார். அதில் நாளை (இன்று) காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு கீழவளவு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்ட தயாநிதி அழகிரி, நேராக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு 11.30 மணிக்கு வந்தார். நேராக கிரானைட் வழக்கு தனிப்படை டி.எஸ்.பி. தங்கவேல் முன்னிலையில் ஆஜரானார். அப்போது தயாநிதி அழகிரியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன், டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான போலீசார் ஒவ்வொரு கேள்விகள“க கேட்டு அதற்கு எழுத்து மூலம் பதில் வாங்கினர். 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதில் அதிகமான கேள்விகளுக்கு தெரியாது என்றும், எனக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு முடிவடைந்தது. இதன்பிறகு தயாநிதி அழகிரி புறப்பட்டு சென்றார். விசாரணைக்கு வந்த தயாநிதி அழகிரியுடன் 15-க்கும் மேற்பட்ட வக்கீல்களும் வந்ததால் எஸ்.பி. அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்