முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா கடும் கண்டனம்

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.29 - தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது என உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர்களுடன்கலந்து ஆலோசித்தே முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார் . 

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்​ அமைச்சர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக எனக்கு நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் உங்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் நான் உள்பட பல்வேறு மாநில முதல்​அமைச்சர்கள் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு எதிராக நான் உள்பட பல மாநில முதல்வர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்ததை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்கள் சிலரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில போலீசிடம் விட்டு விடுவது நல்லது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரவாத எதிர்ப்பு அதிரடி படை உருவாக்கலாம். மாநிலங்கள் எடுத்து வரும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என கடந்த மே மாதம் டெல்லியில் உங்கள் தலைமையில் நடைபெற்ற தீவிரவாத தடுப்பு மையம் சிறப்பு கருத்தரங்கில் நான் கருத்து தெரிவித்திருந்தேன். மேலும் அந்தக் கருத்தரங்கில் மாநிலங்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் விஷயத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். 

இந்தக் கடிதம் வாயிலாக அவற்றை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எல்லா தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு வரி பரிந்துரைக்கு எல்லா முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒருங்கிணைப்பு பணி செய்வதே சரியானதாகும். தீவிரவாத தடுப்பில் தற்போதைய தகவல் பரிமாற்ற மையங்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.

மேலும் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை சேர்ந்தவர்கள் மாநிலங்களில் தன்னிச்சையாக செயல்பட்டு கைது போன்ற நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவது மாநில உரிமையை பறிப்பதாக உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்​அமைச்சர்களே இதை ஏற்க மறுத்துள்ளனர். இந்த பரிந்துரை உள்துறை அமைச்சகத்தின் தவறான வழிகாட்டுதலின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் நடக்கும் விவகாரங்கள் பற்றி அந்தந்த மாநில முதல்​ அமைச்சர்களுக்குத்தான் தெரியும். அவர்கள்தான் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பது மாநில முதல்வர்களுக்கே தெரியும். எனவே மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே இருக்க வேண்டும். இந்த அமைப்பு மாநில அரசுகளின் உளவுத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் மாநில முதல்​அமைச்சர்கள் விரும்புகிறார்கள். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மாநில போலீஸ் வசம் மத்திய அரசு விட்டு விடுவதே நல்லது.  இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதிவிரைவு தீவிரவாத தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட வேண்டும். இந்த படைக்காக மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். அப்படியானால்தான் அதிரடி படைகளுக்கு தேவையான அதிநவீன கருவிகளை வாங்க முடியும். இந்த கருத்துக்களை ஏற்கனவே நான் கடந்த கூட்டத்தில் தெரிவித்தேன்.

இந்த கடிதம் மூலம் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதை நான் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். கடந்த கூட்டத்தில் நான் வலியுறுத்திய மற்றொரு கருத்து பற்றியும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதாவது தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முன்பு எல்லா மாநில முதல்​அமைச்சர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தேன். மேலும் அந்தக் கருத்தரங்கில் மாநிலங்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் விஷயத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். 

ஆனால் மத்திய அரசு இதை காற்றில் பறக்க விட்டு விட்டது போல தெரிகிறது.

எனவே இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் முன்பு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். தற்போது மாநில முதல்​அமைச்சர்களின் கருத்துக்கள் காது கொடுத்து கேட்கப்படுவதில்லை.மத்திய அரசின் அமைச்சகங்களில் கொள்கைகள் வகுக்கப்படுவதற்கு முன்பு மாநில முதல்வர்களின் கருத்தை கேட்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை மத்திய அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டது போல் தோன்றுகிறது. 

டெல்லியில் நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்   நடத்தப்பட்ட விதம் இதற்கு ஒரு உதாரணமாகும்.அந்த அளவுக்கு நிலமை மோசமாகி விட்டது. 

எனது கருத்தை முழுமையாக சொல்ல விடாமல் குரல் வளையை நெரிக்கும் வகையில் கால அவகாச கட்டுப்பாடு விதித்ததால் நான் என் பேச்சை பாதியில் முடித்தேன். எனவே எதிர்காலத்தில் மாநில முதல்​அமைச்சர்களை டெல்லியில் நடக்கும் மாநாடுகளுக்கு அழைக்கும் போது மிகவும் கண்ணியத்துடன் நடத்த அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டப்படி தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு  பல மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் தேசிய அளவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் போது அது தொடர்பான வரைவு அறிக்கையை  மாநில முதல்​அமைச்சர்களுக்கு தர வேண்டும். மாநில அரசுகளுடன் முழுமையாக கலந்தாலோசித்த பின்னரே இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்​ அமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்