முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா ஊட்டி வருகை: அமைச்சர் ஆய்வு

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, டிச.29 - தேயிலை தொழிற்சாலை பொன்விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா ஊட்டிவருவதையொட்டி விழா நடைபெறும் பகுதிகளில் ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடக்காடு பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தின் முதல் தேயிலை தொழிற்சாலையான குந்தா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தேயிலை தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் பொன்விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டு அவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 4-ந் தேதி தமிழக முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் எடக்காட்டில் உள்ள குந்தா கூட்டுறவு தேயிலையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது முதல்வர் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி, ஹெலிகாப்டர் மூலம் வரும் முதல்வருக்கு வரவேற்பு ஏற்பாடுகள் குறித்தும், விழாவில் கலந்து கொள்ளும் தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோரின் கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்தி அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர்களை வழங்குவது போன்றவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 

அதன்பின்னர் புதிய அட்டுபாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தையும், எடக்காடு காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் விழா மேடையையும் அமைச்சர் ப.மோகன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டபோது கூறியதாவது:-

தமிழக முதல்வர் அம்மா குந்தா தேயிலை தொழிற்சாலை பொன்விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இடம், தேயிலை தொழிற்சாலை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் இடங்களை இன்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டோம். விழாவிற்கான தேதி நாளை(இன்று) தெரியவரும் என்றார்.

ஆய்வின் போது  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை முதன்மை செயலர் தனவேல், தொழில் வணிகத்துறை ஆணையர் அர்மந்தர் சிங், இண்ட்கோ சர்வ மேலாண்மை இயக்குநர் உதயசந்திரன், இணை இயக்குநர் கல்யாண சுந்தரம், அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், மாவட்ட எஸ்.பி.,நிஜாமுதீன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ், விழா நடைபெறும் பகுதியான பிக்கட்டி பேரூராட்சியின் தலைவர் ஜெபமணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பெரியசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மேகநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் குணாலன், குந்தா வட்டாட்சியல் கணேசன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள்,  அ.தி.மு.க.,நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.   

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடிக்கடி வந்துள்ளனர். ஆனால் முற்றிலும் கிராமப்பகுதியான எடக்காடு பகுதிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகை தந்து அப்பகுதியில் உள்ள 50 ஆண்டுகால தேயிலை தொழிற்சாலை விழாவில் கலந்து கொள்வதை எண்ணி அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். அத்துடன் தம்முடைய பகுதிக்கு முதன் முதலாக வருகைதரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்க கிராமமக்கள் அனைவரும் தற்போதே தயாராகி வருகின்றனர். இது குறித்து எடக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், முற்றிலும் கிராமம் சூழ்ந்த பகுதியான எங்களது பகுதியில் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து அவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 

கலந்து கொள்வது நாங்கள் செய்த பாக்கியம் என பெருமையுடன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்