முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம்

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச்.29 - டெல்லி தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவை பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து, பல்வேறு அரசு கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

டி.ராஜா எம்.பி:-

டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்திருப்பது, மத்திய அரசுக்குவிடப்பட்டுள்ள எச்சரிக்கை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். டெல்லியில் இது குறித்து பேட்டியளித்த அவர், தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டம் என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும், ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அதிக நேரம் பேச வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதற்கு மாறாக இடையிலேயே மணி அடித்து அவரது பேச்சை நிறுத்திய செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்திலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது முற்றிலும் நியாயமானது என்றும் இதன் மூலம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் டி.ராஜா தெரிவித்தார்.

 

தா.பாண்டியன்:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இதுகுறித்து வன்மையாக கண்டித்துள்ளார். ஒரு மாநிலத்தின் கருத்தை மத்திய அரசுக்கு எடுத்து கூறுவது, மாநில முதல்வரின் கடமையாகும். ஆனால் அந்த கடுமையை செய்ய விடாமல், மத்திய அரசு தடுத்து உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச ஆரம்பித்தவுடன், பள்ளியில் பிள்ளைகள் பேசுகையில் மணி அடிப்பதுபோல், செய்வது அரசியல் அநாகரீகம் ஆகும். மத்திய அரசின் இந்த செயல், தமிழகத்தையே அவமதிப்பதாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். 

 

சரத்குமார் எம்.எல்.ஏ:-

மக்கள் சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களை மத்திய அரசு மிகவும் அவமதித்துவிட்டது என்று கூறியுள்ளார். தமிழக மக்களின் பிரதிநிதியாக முதல்வர் ஜெயலலிதாவை பேசவிடாமல் செய்திருப்பது, மத்திய அரசின் வஞ்சக போக்கை எடுத்துக் காட்டுகிறது. மாநிலங்களின் குரல் வளையை நெறிப்பதற்கு ஒப்பாகும் இது என்றார்.  

 

ஜனதா கட்சித் தலைவர் டாக்டர். சுப்பிரமணியன் சுவாமி:- 

தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்திருப்பது முற்றிலும் நியாயமான செயல் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாநிலத்தின் திட்டங்கள், தேவைகள் குறித்த விஷயங்களை ஒரு முதலமைச்சர் 10 நிமிடங்களில் எப்படி விளக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தை நடத்த நேரம் போதவில்லை என்றால், அடுத்த நாளும், அக்கூட்டத்தை தொடர்ந்து நடத்தலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதைவிடுத்து, ஒரு பள்ளிக்கூட விவாதத்தை மணி அடித்து நிறுத்துவது போல், ஒரு முதலமைச்சரை அவமதித்திருப்பது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, வேகமாக மூழ்கிக் கொண்டிருக்கும் படகு என்பதையே காட்டுகிறது என்றும் டாக்டர். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்:-

பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதும், தேவையான வளர்ச்சி திட்டங்களை போதுமான அளவு கொடுக்காமல் புறக்கணிப்பதும் வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது.

அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் தொடர்பான மசோதாவிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பதும், காவிரி பிரச்சினை, மின்சாரம், மண்எண்ணெய் வழங்குதல் போன்ற பல விஷயங்களில் தமிழகத்தின் நலனுக்கு புறம்பாக நடந்து கொள்வதும் மத்திய காங்கிரஸ் அரசின் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்தநிலையில் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் கவலைகளை எடுத்துக் சொல்வதற்கு வாய்ப்பளிக்காமல், முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். மத்திய அரசின் தவறான இந்த செயலை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்