முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபிடம் விழுந்தது டெக்கான் சார்ஜர்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஏப்.18 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் பரிதாப தோல்வி அடைந்தது ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சங்ககாராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களாக சன்னி சோஹால் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் சோகால் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 13 ஐ எட்டியபோது ஹாரிஸின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார் சோஹால்.  அடுத்து கேப்டன் சங்ககாரா, தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 11 ஓவர்களில் 88 ரன்களை எட்டியபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சங்ககாரா, சாவ்லாவின் பந்தில் மெக்லாரனால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 35. அடுத்த ஓவரிலேயே தவானும் 45 ரன்களில்  பெவிலியன் திரும்பினார். இவரை வல்தாட்டி வீழ்த்தினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள். அடுத்து ஜோடிசேர்ந்த டுமினி, சிப்லி இணை அதிக ரன்களை சேர்க்க தவறியது. 12 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்த சிப்லியும் வல்தாட்டியின் பந்திலேயே கிளீன் போல்டானார். அடுத்து கிறிஸ்டியன் களமிறங்கினார். இந்நிலையில் 18 வது ஓவரில் அணியின் எண்ணிக்கை 129 ஆக இருந்தபோது 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டுமினி, மெக்லாரனின் பந்துவீச்சில் சாவ்லாவிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக கிறிஸ்டியன் ரன்களை சேர்த்ததால் டெக்கான் அணியின் ஸ்கோர் ஓரளவு கெளரவமான நிலையை எட்டியது. 14 பந்துகளில் 30 ரன்களை அடித்த கிறிஸ்டியன் 19 வது ஓவரில் வல்தாட்டியின் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 156.  அடுத்து இறங்கிய அமித் மிஸ்ரா ரன் எதுவும் எடுக்காத நிலையில் வல்தாட்டியின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில்  அவுட்டானார். இறுதியில் டெக்கான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை  எடுத்தது. 

பஞ்சாப் அணி சார்பில் மிகப் பிரமாதமாக பந்துவீசிய வல்தாட்டி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக் லாரன் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

166 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் வல்தாட்டி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். இவர்கள் இருவரின் அதிரடியில் டெக்கான் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது அதிரடியைக் காட்டிய வல்தாட்டி இந்த போட்டியிலும் ஜொலித்தார். இதனால் பஞ்சாப் அணி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 136 ரன்களை குவித்தது. இந்த நிலையில் 46 பந்துகளில் 61 ரன்களை குவித்திருந்த கில்கிறிஸ்ட், அமித் மிஸ்ராவின் சுழலில், ரவி தேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நாயர், வல்தாட்டியுடன் ஜோடி சேர்ந்தார். 47 பந்துகளில் 75 ரன்களை எடுத்திருந்த வல்தாட்டி, மிஸ்ராவின் பந்துவீச்சில் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். வல்தாட்டியின் 75 ரன்களில் 8 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் 17.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி. நாயர் 13 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 75 ரன்களையும் குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின்  ஆல்ரவுண்டர் வல்தாட்டி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த வெற்றியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தை பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்