முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு இன்று கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஆனால் குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நான்காவது முறையாக முதல்வராக நரேந்திர மோடி, கடந்த 26-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு  விழாவில் முதல்வர்  ஜெயலலிதா பங்கேற்று அவரை நேரில் வாழ்த்தினார். 

அதன்பின்  27-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சிக்குழுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்கவும் முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல வேண்டி இருந்தது. 

அதனால்   28- ம் தேதி செயற்குழு, பொதுக்குழு  கூட்டம் நடத்த முடியாமல் இருந்ததால் இந்த கூட்டம் 31- ம் தேதி நடக்கும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 15-ம் தேதியன்று அறிவித்து இருந்தார். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவித்து இருந்தார். அதையொட்டி அ.தி.மு.கவின் செயற்குழுவும், பொதுக்குழுவும் இன்று கூடுகிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மற்றும் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 2500-க்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இரண்டாவது முறையாக இன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் செயற்குழு பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

நாடாளுமன்ற தொகுதி ரீதியான அ.தி.மு.க கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், இது வரை நடந்துள்ள நாடாளுமன்ற தொகுதிக் கூட்டங்கள் குறித்தும் தமிழக அரசு செயல்படுத்தப்பட்டு வரும் 2013 தொலை நோக்குத் திட்டத்தின்படி தமிழக அரசு இது வரை செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும், அ.தி.மு.க. கழக செயல்பாடுகள் மற்றும் துணை அமைப்புகள் குறித்த செயல்பாடுகள் பற்றியும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க இனி செயல்படுத்தப்பட உள்ள கட்சி ரீதியான செயல்பாடுகள் குறித்தும் இந்த பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் கடந்த 27-ம் தேதியன்று நடந்த தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை 10 நிமிடம் தான் பேசவேண்டும் என்று கூறி அவர் பேசும் போது தொடர்ந்து மணியடித்து அவரை பேசவிடாமல் செய்து விட்டனர். இதையடுத்து தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்திலிருந்து  முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். மிக முக்கியமான 12 வது ஐந்தாண்டு திட்ட வரைவு  அறிக்கையை இறுதி செய்யும் கூட்டத்தில் ஒரு மாநிலத்தின் நிலையை 10 நிமிடத்தில் எப்படி எடுத்து  கூற முடியும் என்று கேள்வி எழுப்பிய முதல்வர்  ஜெயலலிதா, இத்தகைய நிலையில் ஒரு மாநில முதல்வரை ஏன் டில்லி வருமாறு அழைக்க வேண்டும்? ஏன் பேச அழைக்க வேண்டும்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அதோடு ஒரு மாநில முதல்வரை பேச விடாமல் செய்தது  தமிழகத்தையே அவமானப் படுத்தியதற்கு ஒப்பாகும் என்றும்  அவர் குறிப்பிட்டிருந்தார். டில்லி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பேச விடாமல் செய்ததற்கு அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற குஜராத் முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்களும், பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். இத்தகைய சூழலில் இந்த செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்  கூடுகிறது. இதையொட்டி  முதல்வரை பேசவிடாமல் செய்ததிற்கு மத்திய அரசின் மீது கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

மேலும் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை செவி சாய்க்காமல் இருப்பது,  பல்வேறு நலத்திட்டங்களுக்கு  போதிய நிதி ஒதுக்காமல் இருப்பது, கூடுதல் மின்சாரம் வழங்காமல் இருப்பது, மாநில அரசுகளின் கருத்துகளையும் மதிக்காமல்  தேசிய பயங்காரவாதத் தடுப்பு மையம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய  அரசு புறக்கணிப்பதைக்  கண்டித்தும், அதே நேரத்தில் தமிழகத்தில்  மத்திய அரசின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும். மின்சாரம் முழுமையும் தமிழகத்திற்கே அளிப்பது, காவிரி ஆணையத்தின்  இறுதித் தீர்ப்பை  அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. 

மேலும் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்களின் கூட்டங்கள் குறித்து ஆய்வுகளை செய்வதுடன் , வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய அரசியலில் முதல்வர் ஜெயலலிதாவை  முக்கியத்துவம் பெற செய்வதற்கான  செயல்திட்டம் உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையில் இன்று கூடும்  இந்த செயற்குழு, பொதுக்குழு  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்