முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நெருக்கடிக்கு சட்டரீதியான தீர்வு ஒபாமா மகிழ்ச்சி

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜன. - 3 - அமெரிக்காவை சில மாதங்களாக வாட்டிக் கொண்டிருந்த டிபிஸ்கல் க்ளிடிப் எனும் பொருளாதார நெருக்கடிக்கு சட்ட ரீதியாக தீர்வு கிடைத்துவிட்டது. அமெரிக்க நேரப்படி செவ்வாய் இரவு 11 மணி அளவில், காங்கிரஸ் சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 257 வாக்குகளும் எதிராக 167 வாக்குகளும் பதிவாகின. முன்னதாக விடிய விடிய நடைபெற்ற செனட் உறுப்பினர்களின் கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட தீர்மானம், செவ்வாய் அதிகாலை இரண்டு மணி அளவில் செனட் சபையில் 89-8 என்ற வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதிபர் ஒபாமாவின் கையெழுத்துக்கு பிறகு தீர்மானம் முழுமையான சட்டவடிவம் அடைந்து விடும். மாற்றம் இல்லாமல் ஏற்றுக் கொண்ட குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் சபையில், சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் செனட் தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர். குடியரசுக் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக தெரிய வந்தது. ஆனாலும் தீர்மானத்தை திருத்தம் செய்யும் கோரிக்கை எழவில்லை. இறுதியில் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்த போது, பட்ஜெட் கமிட்டி தலைவரும், மிட் ராம்னியுடன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நின்று பால் ரயன் தீர்மானத்திற்கு ஆதரவான முதல் வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் சபையின் சபாநாயகரான குடியரசுக் கட்சியின் ஜான் பேனர் ஆதரவு வாக்களித்தார். அதே சமயத்தில் குடியரசுக்கட்சியின் முக்கிய தலைவரும் காங்கிரஸ் மெஜாரிட்டி லீடருமாகிய எரிக் கேன்டர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார். 2016 அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கருதப்படும் குடியரசுக் கட்சியின் மார்கோ ரூபியோ மற்றும் ரான்ட் பால் ஆகிய இருவரும் எதிர்த்து வாக்களித்தனர். பணக்காரர்களுக்கு சலுகை அளிப்பதற்காக ஏழை நடுத்தர மக்களை நசுக்கக் கூடாது, என்ற அடிப்படை கொள்கையை முன் வைத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றேன். அதை நிறைவேற்ற வழிவகை செய்த இந்த புதிய சட்டத்தை அமல்படுத்த உதவிய இருகட்சி தலைவர்கள் ஜான் பேனர், ஹாரி ரீட், நான்சி பெலோஸ்கி மற்றும் மிச் மாக்னெல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக முடித்துத் தந்த துணை அதிபர் ஜோ பைடனுக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் ஒபாமா தெரிவித்தார். 98 சதவித அமெரிக்க மக்களுக்கு வரி உயர்வு கிடையாது. 97 சதவீத தொழில்முனைவோருக்கும் வரி உயர்வு கிடையாது. வேலை வாய்ப்புகளை தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் 2 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலையில்லாத காலத்திற்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என ஒபாமா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதே வேளையில் செலவுகளை குறைப்பது குறித்து திறந்த விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். இருந்தாலும் காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள செலவுகளை இப்போது கட்டுப்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல. வயதானவர்களுக்கான மெடிக்கேர் திட்டத்தை சீரமைப்பதற்கு பல வழிகளையும் ஆராய்ந்து பார்க்கவும் விருப்பமாக உள்ளேன். ஆனால் ஆராய்ச்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை குறைக்க இயலாது. வருவாயை அதிகரிப்பது, செலவுகளை குறைப்பது என இருபக்கமும் சரியான அளவில் தான் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்யமுடியும் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார். நடுத்தர வர்க்க மக்களின் வருமான வரியின் பழைய நிலையை நீட்டித்து தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதியை ஒபாமா நிறைவேற்றி விட்டார். இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு முன்னரே, ஒபாமாவிற்கு கிடைத்த முதல் பெரிய வெற்றி என கருதப்படுகிறது. வருமான வரி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்த தீர்மானம் இரண்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அடுத்த இரு மாதங்களில் மேலும் ஒரு அரசியல் பரபரப்பை எதிர் நோக்கியுள்ளது அமெரிக்கா.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்