முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் புதிய தொழிற்சாலை இணைப்பு

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - தமிழ்நாட்டில் பல புதிய தொழிற்சாலை பகுதிகளை அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 37,709 தொழிலாளர்கள் கூடுதலாக பயன் பெறுவர். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கான பல  சமூகப் பாதுகாப்பு திட்டங்களை  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்ற ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, உடல் நலமின்மை உதவி, பேறுகால உதவி,  உடல்நலமின்மைக்கான nullநீட்டித்த உதவி, சார்ந்துள்ளோர் நல உதவி, தற்காலிக இயலாமையுற்றோருக்கான உதவி, நிரந்தர இயலாமையுற்றோருக்கான உதவி, கருத்தடை அறுவை சிகிச்சைக்கான உதவி, இறுதிச் சடங்குக்குரிய உதவி, வேலை இழந்தோருக்கான உதவி மற்றும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, பல்செட், மூக்கு கண்ணாடி வழங்குதல் போன்ற பல சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதிகள் வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கென 2,363 படுக்கைகள்  கொண்ட 191 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மற்றும் 9 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டங்கள் தோறும், பெருகி வரும் தொழிற்சாலைகளில்  பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியில் மூன்று மருத்துவர் கொண்ட மருந்தகம் ஒன்றும், மணவாளக்குறிச்சியில் இரண்டு மருத்துவர் வகை கொண்ட மருந்தகம் ஒன்றும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், படப்பைப் பகுதியில் இரண்டு மருத்துவர் வகை கொண்ட மருந்தகம்  ஒன்றும் தொடங்குவதற்கு சென்ற ஆண்டு தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டார்.

தற்பொழுது, தமிழகம் முழுவதும் பெருகிவரும் தொழில் நிறுவனங்களால், தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது.  இவர்களுக்கும்,  தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும்  அனைத்து மருத்துவ வசதிகளையும் விரிவுப்படுத்தும் வகையில், தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகளை, அப்பகுதிகளுக்கு அருகில் தற்பொழுது இயங்கி வரும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைப்பதற்கு தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுக்காவிலுள்ள, பொன்னக்குடி பகுதியை, வண்ணாரப்பேட்டை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகர்புற பகுதியை, நாகர்கோவில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு மற்றும் வாடிப்பட்டி தாலுக்காவிலுள்ள பரவை நகர்புற பகுதியை, தல்லாகுளம் மற்றும் பரவையிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்துகத்துடனும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுக்காவிலுள்ள சின்னக்காமன்பட்டி பகுதியை, சாத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும்,  மதுரை மாவட்டம், மதுரை நகர்புற பகுதியை பரவை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு புறநகர் பகுதியை செங்கல்பட்டு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், கரூர் மாவட்டம், கரூர்  தாலுக்காவிலுள்ள ஆத்தூர் பகுதியை, கரூர் மற்றும் புலியூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தாலுக்காவிலுள்ள, வல்லக்குண்டு பகுதியை முனிச்சாலை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும்,  காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுக்காவிலுள்ள சிறுசேரி பகுதியை, கேளம்பாக்கம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும்.  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுக்காவிலுள்ள சேத்தூர் பகுதியை ராஜபாளையம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், கோயம்புத்தூர் மாவட்டம், பன்னிமடை மற்றும் சின்னத்தடாகம் பகுதிகளை துடியலூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவிலுள்ள மணலிப் புறநகர் பகுதியை மணலி தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், ஈரோடு  மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் புறநகர் பகுதி, கோபி செட்டிப்பாளையம்,  தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தாலுக்காவிலுள்ள வேங்கைவாசல் பகுதியை தாம்பரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுக்காவிலுள்ள நல்லி மற்றும் ஏழாயிராம்பண்ணை பகுதிகளை சாத்தூர் மற்றும் தாயில்பட்டி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடனும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் புறநகர் பகுதியை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி தாலுக்காக்களில் உள்ள விருதுநகர் பகுதிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆமத்தூர், சிவகாசி மற்றும் ஆலங்குளம் பகுதிகளிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடனும், சேலம் மாவட்டம், சேலம் மற்றும் வாழப்பாடி தாலுக்காக்களிலுள்ள வீராணம், வலசையூர், குள்ளம்பட்டி, மின்னம்பள்ளி பகுதிகளை, அம்மாபேட்டை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தாலுக்கா மற்றும்  மேலூர் தாலுக்காக்களிலுள்ள மதுரை புறநகர் பகுதிகள் (அழகர்கோவில்) தல்லாகுளம் மற்றும் மேலூர், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைக்கப்படும் என  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 37,709 தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்