முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு தொழிற்சாலை கண்காணிப்பு குழுவுக்கு அலுவலர்கள்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - பட்டாசு தொழிற்சாலை கண்காணிப்புக்குழுவுக்கு அலுவலர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் சீரிய முறையில் கண்காணிக்கவும், தொழிலாளர்களின் உயிரிழப்பினை தடுக்கும் நோக்கிலும், ஒரு நடமாடும் கண்காணிப்பு குழு ஒன்றினை ஏற்படுத்த  தமிழக முதலமைச்சர்   ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார்.

இந்த  கண்காணிப்புக் குழுவிற்கு தொழிற்சாலைகள் இணைத் தலைமை ஆய்வாளர் 1, தொழிற்சாலைகள் ஆய்வாளர் 1, தட்டச்சருடன் இணைந்த  இளநிலை உதவியாளர் 1, ஓட்டுநர் 1, அலுவலக உதவியாளர் 1, என 5 பணியிடங்களை தோற்றுவிக்க  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவிற்கு தொழிற்சாலைகள் இணைத் தலைமை ஆய்வாளர் தலைமை வகிப்பார். 

இந்தக் குழு, தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளுதல், பணிபுரியும் இடங்களில் நிலவும் பாதுகாப்பு மற்றும் உடல்நிலை ஆகியவற்றைக் கண்காணித்தல், தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு போதிய பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்,  கிராமங்களுக்கு சென்று  நாடகம், நடனம், காணொலி காட்சி நடத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்,  பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அன்றாடம் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணித்தல் போன்ற பல்வேறு  பணிகளை மேற்கொள்ளும்.   இதற்காக அரசுக்கு 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். 

தமிழ்நாட்டில் தற்பொழுது செயல்பட்டு வரும் 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 58 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான தொழிற்பயிற்சி நிலையங்கள் 40 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டவை. எனவே இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் உபயோகத்தில் உள்ள அறைகலன்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்டதால், அவை பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

எனவே, விருதுநகர், தூத்துக்குடி, திருச்செந்தூர், திண்டுக்கல், பரமக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், ஈரோடு, குன்னூர், கிண்டி, அம்பத்தூர், முதுகுளத்தூர், திருக்குவளை ஆகிய  இடங்களிலுள்ள 15 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு  வகுப்பறை அறைகலன்கள் வாங்குவதற்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்