முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி: வைகைச்செல்வன்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அரசு கொறடா வைகைச்செல்வன் கூறினார். அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்ட இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை சார்பாக மாபெரும் கபடி போட்டி காட்டுமன்னார் கோயிலில், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமை பொறுப்பை ஏற்று கபடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். 

இவ்விழாவில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான வைகைச்செல்வன் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிக்காக, சமுதாய சீர்த்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார். தமிழ் சமுதாயம் தலைநிமிர உழைத்தவர் அறிஞர் அண்ணா. ஏழை மக்களின் கண்ணீரை துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றையும் ஒருங்கே பெற்றுள்ளவர் முதல்வர் ஜெயலலிதா. 

எம்.ஜி.ஆர். 11 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதல்வர் ஜெயலலிதா 12 ஆண்டுகளாக முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்திய வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் 23 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை. அந்த சாதனை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். முதல்வர் ஜெயலலிதாவை அழிக்க நினைத்து எத்தனையோ தடைகளை ஏற்படுத்தினார்கள். அத்தனை தடைகளையும் தாண்டி வெற்றி கண்டவர் முதல்வர் ஜெயலலிதா. 

18 லட்சம் உறுப்பினர்களை கொண்டிருந்த அ.தி.மு.க.வை ஒன்றரை கோடி உறுப்பினர்களாக ஆக்கி கட்சியை எஃகு கோட்டையாக ஆக்கியவர் முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளையும், அளிக்காத வாக்குறுதிகளையும் இந்த 18 மாதங்களில் மக்கள் நலன் கருதி நூற்றாண்டு பேசும் ஓராண்டு சாதனை செய்து ஆட்சி நடத்தி வருகிறார். 1.85 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கி வருகிறார். 

பெண்கள் நாட்டின் கண்கள். ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம், பட்டயம் பெற்றிருந்தால் ரூ.50,000 மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கி வருகிறார். நெசவாளர்களின் வறுமையை ஒழித்து காட்டியிருக்கிறார். ரூ.1.80 லட்சம் மதிப்பில் சூரிய சக்தியுடன் கூடிய 200 சதுர அடியில் பசுமை வீடுகள் வழங்கி வருகிறார். இந்த 2 ஆண்டில் 1,20,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க வேண்டி 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,500, ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 என மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து செல்லும்போது வழங்கப்படுகிறது. இது தவிர மாணவர்களுக்கு மிதிவண்டி, பாடபுத்தகம், சீருடை, காலணி, கலர் பென்சில், புத்தகப்பை, அட்லஸ், ஜாமின்டிரி பாக்ஸ் என ஏராளமான பொருட்களை வழங்கி வருகிறார். 

முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கோடு சிந்தித்து திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் புதுப்புது திட்டங்களை அறிவிக்கிறார். வெண்மை புரட்சி ஏற்படுத்திட வேண்டியும், கிராம பொருளாதாரம் மேம்பட வேண்டியும்,     அதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்ற அடிப்படையில் ஏழை மக்களுக்கு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வெண்மை புரட்சியின் மூலம் கடந்த ஆண்டு 21 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி இந்த ஆண்டு 27 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பெண்களின் குடும்ப சுமையை குறைக்கும் விதமாக விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி வருகிறார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெளி மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவங்க ஏதுவான சூழ்நிலை உள்ளதாக தொழில் முனைவோர் தொழில் துவங்க முன் வந்துள்ளார். இதனால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். மின்சார தட்டுப்பாட்டை தீர்க்க முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் ஜூன் 2013-க்குள் உறுதியாக மின்தட்டுப்பாடு நீங்கும். 

1991-ல் இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற ஆணையை பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா. கச்சத்தீவு 1974-ல் கருணாநிதியினால் தாரை வார்க்கப்பட்டது. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. வருவாய்த்துறை ஆவணங்களை ஆதாரமாக வைத்து கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தம் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத்தீவின் தமிழக உரிமையை உச்சநீதிமன்றம் மூலம் நிச்சயம் முதல்வர் ஜெயலலிதா மீட்டெடுப்பார். 

முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வந்தால்தான் தமிழக ஜீவாதார பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும், மாநில பிரச்சினைகளை தீர்க்க முதல்வர்  ஜெயலலிதாவால்தான் முடியும் எனவும், இந்தியாவை வல்லரசாக்க முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர சர்வ வல்லமை படைத்தவர் என டெல்லி பத்திரிகைகள் கூறுகின்றன. இவ்வாறு

அரசு கொறடா வைகைச்செல்வன் பேசினார். 

தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மின்சாரத்தினை வழங்காமல், பாரபட்சமாக செயல்படும் மத்திய அரசை பார்த்து, ஆட்டுக்கும், மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அடங்காத மத்திய அரசுக்கு மூன்று கொம்பா? என ஆவேசமாகவும், முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என கூறி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எனவும், நாற்பதும் நமதே, நாளை நமதே, நாளைய பாரதம் நமதே என அவர் மேலும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்